Sarathkumar: ``MGR-போல மக்கள் சக்தியுடையவர் நடிகர் சரத்குமார்" - நயினார் நாகேந்திரன்
கள்ளக்குறிச்சியில் நடிகர் சரத் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் உரையாற்றிய பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ``நட்புக்கு இலக்கணம் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். அவர் நினைத்திருந்தால் ஆயிரம் கோடி ரூபாய் கூட சம்பாதித்திருக்க முடியும். எம்.ஜி.ஆருக்கு நிகரான மக்கள் சக்தி படைத்தவர்.
ஆனால் நம்மைப் போல சாதாரணமாக வாழ்ந்துவரும் நல்ல மனிதர். 30 ஆண்டுகளாக திரைத்துறையில் முடிசூடா மன்னனாக, சமத்துவக் கட்சியின் தலைவராக இருப்பவர் சரத் குமார். எப்போது சரத் குமார் நெல்லை வந்தாலும் என்னைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் படத்திலும் நடித்து, மக்களிடமும் நடித்து மக்களின் நாடித்துடிப்பை அறிந்து மக்களுக்காக பணியாற்றினார்.
அதுபோலதான் நடிகர் சரத்குமாரும் மக்களின் நாடித்துடிப்பை தன் கையில் வைத்திருக்கிறார். அவருக்கு மக்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை செயல்படுத்தும் கருவிதான் பா.ஜ.க. அதில் தன்னையும் இணைத்துக்கொண்டவர்.
உலகிலேயே பெரிய கட்சி பா.ஜ.க. எங்களுக்கும் சுப்ரீம் ஸ்டாருக்கும் எதிரியே கிடையாது. பா.ஜ.க தலைமை அவரைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அவருக்கு விரைவில் பெரியப் பொறுப்புகளை வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 2026-ல் திராவிடக் கழகத்தை வீட்டுக்கு அனுப்பும் பா.ஜ.க-வுக்கு ஒரு தூதராக சரத்குமார் இருப்பார்" என்றார்.