பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதல் ஒதுக்கீடு: மத்திய அரசு திட்டம்
Stalin: `2026 மட்டுமல்ல 31, 36-லும் திராவிட மாடல் ஆட்சி தான்!' - சொல்கிறார் ஸ்டாலின்
5 நாள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டத்தில் தங்கியிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், அரசு மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். நூற்றாண்டு பழைமை வாய்ந்த தாவரவியல் பூங்காவான ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவின் 127- வது மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

ஊட்டியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " ஊட்டி மலர் கண்காட்சி ஏற்பாடுகள் எதிர்பார்த்த விதத்தை விட மிகவும் சிறப்பான முறையில் இருந்தது. ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டுள்ள நிலையில், இது குறித்து மற்ற மாநில முதலமைச்சர்களுடன் பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்தியா கூட்டணி பலவீனமாக இருப்பதாக ப.சிதம்பரம் கூறியிருப்பது அவருடைய கருத்து மட்டுமே. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தமிழ்நாடு மீது தொடர்ந்து சர்வாதிகாரப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது. 2026 மட்டுமல்ல 2031, 2036 - லும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிட மாடல் ஆட்சி தான் தமிழ்நாட்டில் தொடரும் " என்றார்.

எம்.பி ஆ. ராசாவுடன் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சருடன் விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். உள்ளுர் மக்கள் பலரும் முதலமைச்சரைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.