Tirupati Laddu: திருப்பதி லட்டு விவகாரம்; திண்டுக்கல் டெய்ரி நிறுவனத்தினர் உள்பட 4 பேர் கைது!
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருப்பதி லட்டு தயாரிப்பில் மீன் எண்ணெய், சோயா பீன், சூரிய காந்தி எண்ணெய், விலங்குக் கொழுப்பு உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருப்பதாக வெளியான ஆய்வின் முடிவுகள் நாடெங்கும் பெரும் சர்ச்சைக் கிளப்பியிருந்தது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு (டிடிபி கட்சி), ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் (ஒய்.எஸ்.ஆர் கட்சி) இருந்தபோது திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர் என்றும் புனிதமான திருமலை லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியும் மாசுபடுத்தியுள்ளனர் என்றும் பரபரக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்திருந்தனர் ஒய்.எஸ்.ஆர் கட்சியினர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-08/066003c9-44ce-46f6-8694-ef1ca074fcd5/GT1ZUdMacAA9TYs.jpeg)
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து, திருப்பதிக்கு பால். நெய் மற்றும் அதன் உற்பத்திப் பொருள்களை அனுப்பிய நிறுவனங்களும் மீதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் அதிரடியாக விசாரணை நடத்தியது.
'சி.பி.ஐ' -யின் இந்த விசாரணையில் 2 அதிகாரிகள், ஆந்திரா காவல்துறை அதிகாரிகள் 2 பேர், உணவுத் தர கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் இடம் பெற்றிருந்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-12-29/0hvj9qy3/q18.jpg)
இதையடுத்து இந்த சிறப்பு புலனாய்வுக் குழு தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிலும் சோதனை நடத்தியது. இதேபோல உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில் திருப்பதி லட்டுக்கான நெய் கலப்பட விவகாரத்தில்
திண்டுக்கல்லைச் சேர்ந்த 'ஏ.ஆர் டெய்ரி' என்ற பால், நெய் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜசேகரன், உத்தரகாண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த விபின் ஜெயின்,பொமில் ஜெயின், அபூர்வா சாவ்டா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.