செய்திகள் :

Travel Contest : எங்களுக்காக மாலையைக் கழற்றிய ஐயப்ப பக்தர்கள்! - மறக்கவே முடியாத மும்பை பயணம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

பயணங்கள் என்றும் இனிமையான அனுபவங்களை கொண்டவை. நாம் பயணிக்கும் ஒவ்வொரு தருணமும் நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது . வெவ்வேறு மனிதர்கள், கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்களை அறிமுகம் செய்கிறது பயணங்கள்.

மூச்சுமுட்ட வைக்கும் இன்றைய செயற்கை வாழ்க்கைமுறையில் இருந்து நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள பயணங்கள் உதவுகிறது. அப்படி இளைப்பாற 15 வருடத்திற்கு முன் நாங்கள் பயணித்த ஊர்தான் மும்பை.

இளைப்பாற சென்ற இடத்தில் அன்பு, அக்கறை, மனிதம் போன்ற அனைத்து நல்லியல்புகளையும் கொண்ட மனிதர்களை கண்ட பயணம். சுற்றுலா என்ற ஒரு வார்த்தையில் இந்த பயணத்தை என்னால் சொல்லி விட முடியாது. மனிதநேயத்தை கண்கூடாகப் பார்க்கச் செய்த பயணம் இது.

மும்பை
Mumbai

எனது மகனின் அரையாண்டு விடுமுறைக்கு, மும்பையில் வசித்து வந்த எனது தங்கையின் வீட்டுக்கு செல்ல தீர்மானித்து இருந்தோம். கணவரின் பணிசூழல் காரணமாக அவர் வர இயலாததால் எனது மாமியார், மற்றும் அவரது இரு தங்கைகளும் எங்களது பயணத்தில் இணைந்து கொண்டனர்.

தேனியில் வசித்து வந்த நாங்கள் மும்பைக்கு ரயிலில் பயணம் செய்ய முடிவெடுத்து டிக்கெட் முன்பதிவு செய்து, பயண நாளுக்காக காத்திருந்தோம்.

ஆண் துணையின்றி, வெகு தொலைவில் உள்ள ஊருக்கு செல்ல வேண்டுமா என்ற பல பேரின் கேள்விகளை கடந்து நான்கு பெண்கள், இரு குழந்தைகள் என்று பயணத்திற்கு தயாரானோம். மதுரையில் இருந்து மும்பை செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்ததும் மனம் குழந்தையாய் துள்ளியது.

மற்ற வாகனங்களை விட ரயில் பயணம் என்றும் அலாதியான இன்பத்தை தரும். அதன் 'தடக் தடக் ' சத்தமும், அதன் குலுங்களும் ஏதோ நம்மை தாலாட்டி தூங்க வைப்பது போல் இருக்கும். என்னை விட வயதில் முதிர்ந்த எனது மூன்று மாமியார்களுக்கு இப்பயணம் மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது என்பதை அவர்களின் புன்னகை மாறா முகத்தை பார்த்து அறிந்து கொள்ள முடிந்தது. அந்த புன்னகை, பயணம் முடியும் வரை நிலைத்து இருக்கும் என்ற நம்பிக்கையில் பயணத்தை தொடங்கினோம்.

சித்தரிப்புப் படம்

ஒன்றரை நாள் பயணத்தை முடித்து மும்பை ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். எனது தங்கை கணவர் இந்திய கப்பற்படையில் பணிபுரிந்து வந்ததால் அவர்களுடைய குவாட்டர்ஸ் தங்க அனுமதி வாங்கி அழைத்து சென்றார்.

ராணுவத்தினர் தங்கும் இடம் என்பதால் உள்ளே செல்லவே பல protocol வழக்கங்கள் இருந்தது. கடற்கரையை ஒட்டிய இடம் என்பதால் சிலுசிலுவென்ற காற்று எங்களை வரவேற்றது.

Gated community போல் அனைத்து வசதிகளும் கொண்ட இடம். ஒவ்வொரு தடவை Gate யை விட்டு வெளியே செல்ல/ உள்ளே வர, ராணுவ அனுமதி வாங்க வேண்டியது கட்டாயமாக இருப்பது ஒரு வித அலுப்பைத் தந்தது. ஆனாலும் ஊர் சுற்றி பார்க்க இருந்த ஆர்வம் அனைத்து சங்கடங்களையும் உடைத்தது.

தேனியில் வசித்த எங்களுக்கு மதுரையே பெரிய ஊர் என்கிற நிலையில் மும்பை போன்ற ஊரை பார்த்து எவ்வளவு பிரமித்து இருப்போம் என்பதை சொல்லில் அடைக்க முடியாது. தினம் ஒரு சுற்றுலா தளம் என்ற கணக்கில் பயணப்பட்டோம்.

வயதான பெண்மணிகள் நான்கு பேர் (எனது அம்மா மும்பைக்கு ஏற்கனவே சென்று தங்கி இருந்தார் ) என்பதால் அவர்களது விருப்பமாக கோயில்களுக்கு செல்வதே பிரதனமாக இருந்தது. மும்பையின் பிரசித்தி பெற்ற, சித்தி விநாயகர் கோயில், மகாலக்ஷ்மி கோயில், ISKON கோயில், சனீஸ்வரர் கோயில் என பல கோயில்களுக்கு சென்று வந்தோம்.

ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு திசையில் இருப்பதால், மற்ற இடங்கள் பார்க்கும் பொழுது கோயிலையும் இணைத்துக் கொண்டோம். பெரிய பாறைகள் கொண்டு கட்டப்பட்ட தமிழக கோயில்களை போல் அல்ல மும்பை கோயில்கள்.

கலை ரசனையற்ற வெறும் கட்டிடமாகவே கோயில்கள் இருந்தது ஏமாற்றத்தை தந்தது. ஆனால் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்த மட்டுங்கா பகுதியில் நம் தமிழ் பாரம்பரிய கோபுரம் உள்ள கோயில்கள் பல உள்ளன. அப்பகுதிக்குள் நுழையும் பொழுது ஏதோ மறுபடி தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டோமோ என்ற ஐயம் வந்துவிடும். தமிழக உணவு வகைகளும் அங்கு உள்ள ஹோட்டல்களில் கிடைக்கும். அங்கு பிரபலமான ஒரு தோசை கடை இன்றும் மனதில் நிற்கிறது. இன்று பரவலாக கிடைக்கும் schezwan வகை உணவுகள் அன்றே தோசை வகையில் கிடைத்தது. அதன் ருசி, இன்றும் அவ்வகையில் கிடைக்கவில்லை என்பது உண்மை.

அடுத்து சீரடி சாய்பாபா கோயிலுக்கு செல்ல முடிவு செய்து மும்பையில் இருந்து இரவு ரயிலில் கிளம்பினோம். 5 மணிநேரம் பிரயாணதிற்கு பின் விடியற்காலை நான்கு மணிக்கு சீரடி அடைந்து, ஏற்கனவே முன் பதிவு செய்த ஹோட்டல் அறையில் தங்கி கிளம்பி கோயிலை அடைந்தோம்.

அன்று வியாழக்கிழமை இல்லாததால் கூட்டம் அதிகமாக இல்லை. ஆனாலும் நீண்ட வரிசை காத்திருப்புக்கு பின்பே சாய்பாபா தரிசனம் கிடைத்தது.

சாய்பாபாவை பற்றிய வரலாற்று கதைகளை அறிந்து கொள்ளும் வகையில் வாசிக்க பல பலகைகள் கோயில் உட்புறம் தொங்கவிட்டு இருந்தனர்.

மதியம் கோயிலில் உணவு பிரசாதம் கிடைத்தது. அங்கு சாப்பிட்டுவிட்டு உடனே மும்பை கிளம்ப தயார் ஆனோம். மும்பை செல்ல இந்த முறை பஸ்ஸை தேர்ந்தெடுத்தோம். ஆனால் ஏன்டா பஸ்ஸில் ஏறினோம் என்கிற அளவு அசுத்தம் நம்மை குமட்ட வைத்து விடும். பஸ் முழுதும் பான்பராக் எச்சங்களும், வாடையும் எங்களை சங்கடப்படுத்தியது. ஒரு வழியாக இரவு 8 மணிக்கு மும்பை வந்து சேர்ந்தோம்.

எனக்கு மும்பையில் மிகவும் பிடித்த இடமாக ' Elephanta cave' யை சொல்லுவேன். கடற்கரைக்கு அப்பால், மும்பை துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள Gharapuri தீவில் அமைந்துள்ளது. Gateway of India பகுதியில் இருந்து மோட்டார் படகுகள் வழி அங்கு செல்ல வேண்டும். தீவிற்கு செல்ல ஒரு மணி நேர கடல் பயணம் மேலும் பிரமிப்பை தரும். வெறும் கட்டிடம் நிறைந்த ஊராக இருந்த மும்பையில் பழங்கால குடவரை கோயிலை பார்த்த திருப்தி அலாதியானது. மிக பெரிதான மும்மூர்த்தி சிலைகள் மற்றும் குகைகள், நம்மூர் மஹாபலிபுரம் கோயிலை நினைக்க வைத்தது.

மறுநாள் உள்ளூர் மும்பையை முழுவதும் சுற்றிப் பார்க்க லோக்கல் ட்ராவெல் பஸ்ஸில் புக் செய்து கிளம்பினோம். Marine drive, Nehru Science centre, Gateway of India, Byculla zoo, Bandra beach, Worli Bridge என்று மும்பையின் முக்கிய இடங்களை சுற்றி பார்த்த திருப்தியுடன் ஊர் திரும்ப தயார் ஆகினோம்.

இதற்கு நடுவில் எனது சின்ன மாமியாரின் உடல்நிலை சரி இல்லாமல் போனது. நீரழிவு நோயினால் அவதிப்பட்டு வந்தவருக்கு மும்பை அலைச்சல் ஒத்துக்கொள்ளாமல் போய் படபடப்பும், மயக்கமும் அடிக்கடி வர, ஊர் சுற்றி பார்க்க அவரால் வரமுடியாமல் போனது. மருத்துவமனைக்கு அழைத்து சென்று வீட்டில் அவரை ஒய்வு எடுக்க வைத்தோம். அவர் இல்லாமல் சில இடங்கள், ஷிப்பிங் என்று சென்று வந்தோம்.

மும்பையில் தமிழ்நாட்டில் கிடைப்பதை விட மிக குறைவான விலையில் பொருட்கள் கிடைத்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆடைகள், செருப்புகள், handbags என அள்ளி குவித்தோம். ஊருக்கு கொண்டு சென்ற பை நிறைந்து luggage க்காகவே புதிய luggage பைகள் வாங்கி அடைத்து வைத்தோம்.

10 நாள் மும்பையில் இருந்துவிட்டு முழு திருப்தியுடன் மதுரை திரும்ப ரயில் ஏறினோம். ஏற்கனவே உடல்நிலை சரி இல்லாமல் இருந்த என் சின்ன மாமியாருக்கு அதற்கான precautions எடுத்து கிளம்பிவிட்டோம்.

January மாதம் முதல் வாரம் என்பதால் மும்பை வாழ் தமிழ் மக்கள் நிறைய பேர் சபரிமலைக்கு மாலை போட்டு ரயிலில் வந்தனர். எங்கள் compartment முழுவதும் அவர்கள் தான். ஆண்கள், குழந்தைகள், வயதான பெண்கள் என சபரிமலை பக்தர்கள் குழுமி இருந்தனர். எங்கள் அருகிலும் அவர்கள் தான் இருந்தனர்.

முதல் நாள் முழுவதும் பஜனை, பாடல்கள் என்று பயணம் ஒரு புது அனுபவமாக இருந்தது. முதல் நாள் படுத்தே வந்து கொண்டிருந்த சின்ன அத்தை கர்நாடகாவில் நுழைந்த சில மணிநேரங்களில் மயங்கி சரிந்தார்.

முதல் நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருந்ததால் மயங்கி விட்டார் என நினைத்து பதறிய படி அங்கு டாக்டர் யாராவது இருக்கிறார்களா என அடுத்த compartment வரை சென்று தேடிப் பார்த்தேன். யாரும் இல்லாத நிலையில் என்னென்னமோ செய்து பார்த்தும் முழிக்கவில்லை. அவர் இறந்துவிட்டார் என புரிந்தது.

சித்தரிப்புப் படம்

எங்கள் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து அடுத்த பகுதிக்கு சென்று என்ன செய்யலாம் என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர். அனைத்து பக்தர்களும் சங்கடத்தோடு ஒதுங்கி கொண்டனர். நாங்கள் கையறு நிலையில் அழுதுக் கொண்டிருந்தோம். பேசி முடித்து 3 பக்தர்கள் மட்டும் மாலையை கழற்றி எங்களுக்கு உதவி செய்ய முன்வந்தனர். அதற்குள் TTR அடுத்த ஸ்டேஷனில் டாக்டரை வரவழைத்தார்.

டாக்டர் இறந்து விட்டதை உறுதி செய்ததும் எங்களை கர்நாடகா ஸ்டேஷன்ல் இறங்கச் சொன்னார்கள். ஏற்கனவே இறந்த துக்கம், வயதான 2 மாமியாரும் அழுதபடி இருக்க, கையில் 2 சின்ன பிள்ளைகள், அதிக luggage என நான் மட்டும் தனியே நின்றிருந்தேன். கர்நாடகாவில் இறங்கி நான் இத்தனை பேரை மறுபடி எப்படி தேனி போவது என்ற பயம் என்னை பதற வைத்தது.

நாங்கள் தனியாக தவித்ததை பார்த்த மொத்த ஐயப்ப பக்தர்களும் எங்களுக்காக ஸ்டேஷனில் இறங்கி அதிகாரிகளிடம் பேசி பார்த்தனர். அவர்கள் பிடிவாதமாக இருக்கவும், பக்கத்து கம்பார்ட்மென்ட் மக்களும் வந்து எங்களுக்காக வாக்குவாதம் செய்து, போராடினார்கள். 2 மணி நேர தாமதத்திற்க்கு பின் 'தமிழ்நாடு சென்றதும் முதல் ஸ்டேஷன்ல் இறங்க வேண்டும்' என்று உத்தரவு கொடுத்து அனுப்பி வைத்தனர்.

சித்தரிப்புப் படம்

சேலம் வரும் வரை மொத்த ஐயப்ப பக்தர்களும் எங்களுக்கு உதவியாக இருந்தனர். சபரிமலைக்கு மாலை போட்டவர்கள் இறப்பை தீட்டாக நினைப்பார்கள். ஆனால் அன்று அதை மறந்து மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட பக்தர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது. தெரியாத ஊரில், தெரியாத மனிதர்களிடயே அந்நியமாக உணர்ந்த நிலையில், அவர்களின் அன்பும் அக்கறையும் நெகிழச்செய்தது.

சேலம் வந்ததும் போலீஸ், ரயில்வே அதிகாரிகள், டாக்டர் குழு என அத்தனை பேரும் காத்திருந்தனர். பல formalities கிடையே என் பிள்ளைகளையும், லக்கேஜ்யையும் பத்திரமாக பார்த்து என்னிடம் ஒப்படைத்து பக்தர்கள் சென்றது நெகிழ்ச்சியாக இருந்தது.

48 நாட்கள் விரதம் இருந்து அவ்வளவு தூரத்தில் இருந்து கோயிலுக்கு சென்ற பக்தர்களுக்கு சங்கடத்தை கொடுத்து விட்டோமே என்ற உறுத்தல் இருந்தது. அவர்களின் அன்பான உதவியை என்றும் மறக்க முடியாத அளவு இன்றும் மனதார நன்றி சொல்லிக்கொள்வேன். சூழல் காரணமாக யாருடைய மொபைல் எண்ணும் வாங்க இயலவில்லை.

சித்தரிப்புப் படம்

அப்பொழுது தமிழக அமைச்சராக இருந்த ஒரு அரசியல் பிரமுகரின் உதவியால் , postmortem formalities எல்லாம் வேகமாக முடித்து தேனி வந்து சேர்ந்தோம்.

மும்பையை சுற்றிப் பார்க்க சந்தோஷமாக கிளம்பி சென்று பெரும் சோகத்துடன் ஊர் வந்து சேர்ந்தது மொத்த குடும்பத்திற்கும் வலி மிகுந்த வேதனையைத் தந்தது. என் சின்ன அத்தை இல்லாத வீட்டில் அவர் குடும்பத்தினருக்கும் ஆசையாக வாங்கிய பொருட்கள் ஒரு ஓரமாக கிடந்தது.

பல வருடங்களுக்கு பின், இது போன்ற ஒரு கதை களத்தில் வெளியான 'அயோத்தி' படம், உறங்கிக் கொண்டிருந்த என் அடிஆழ நினைவுகளை கண்ணீராக மீட்டெடுத்தது.

' உதவி செய்ய யாருமே இல்ல, உனக்கு பிடிச்சவங்களோட மரணத்தோட தன்னந்தனியா இருந்து இருக்கியா..' என்கிற சசிகுமாரின் வசனம் என்னை தேம்பி அழச் செய்தது.

அன்று உதவி செய்ய யாருமற்ற சூழலில், எங்களுக்காக வந்த சபரிமலை பக்தர்களும், வேற்று மாநில மனிதர்களும் அன்றி இவ்வுலகில் கடவுள்கள் வேறு யாருமில்லை என்று உணரமுடிந்தது. அவர்களின் மேல் உள்ள நன்றியுணர்வை இன்றும் என் கண்ணீரால் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

SuperShe Island: `மகளிர் மட்டும்' பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட சுற்றுலா தீவு; என்ன ஸ்பெஷல்?

பெண்களுக்கு என்றே ஒரு தனித்தீவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தீவில் அவர்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் தங்களின் சுற்றுலா அனுபவத்தை பெறுவார்கள். எங்கிருக்கிறது இந்த தீவு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.... மேலும் பார்க்க

கலை என்னும் கவிதை! - இத்தாலியின் `ஊசி நூல் முடிச்சி’ சிலை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Summer Trip: உங்க சம்மர் ட்ரிப் ஆரோக்கியமாக இருக்க டிப்ஸ்!

சம்மர் ட்ரிப் செல்வதெனத் திட்டமிட்டிருக்கிறீர்களா? எங்கே செல்வது, எப்படிச் செல்வது, எத்தனை நாள் பயணம்? என்றெல்லாம் யோசிக்கும்போதே அந்தப் பயணம் ஆரோக்கியமானதாகவும் அமைய வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள்... மேலும் பார்க்க

Travel Contest : இவ்வளவு தானா தாஜ்மஹால்? - ஏமாற்றம் அளித்த அந்த இரவு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சூரியன் நடத்துகின்ற வண்ண விளக்கு ஜாலம்! - `அரோரா’ பற்றித் தெரியுமா? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: மலையேற்றம், மடங்கள், புனித நீர்வீழ்ச்சி - அழகு நிறைந்த அருணாச்சல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க