Trump: ``டிரம்ப் முடிவுகளால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்" -எச்சரிக்கும் உலக வங்கி
அமெரிக்காவைச் சேர்ந்த மீடியா நிறுவனம் ஒன்று, டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்பது தொடர்பாக சர்வே ஒன்றை எடுத்துள்ளது.
அதில் 'டிரம்ப் பதவியேற்றப்பிறகு, மளிகை சாமான்கள், ரியல் எஸ்டேட், மருத்துவம் ஆகியவற்றின் கட்டணம், செலவு குறையுமா' என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு வெறும் 20 சதவிகிதம் பேர் மட்டும் 'நிச்சயம் குறையும்' என்று பதில் அளித்துள்ளனர்.
மீதி 80 சதவிகிதம் பேர், டிரம்பின் மேல் நம்பிக்கை தெரிவிக்கவில்லை. இதில் டிரம்பின் ஆதரவாளர்களும் அவர்மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
2024-ம் ஆண்டு நடந்த அமெரிக்கத் தேர்தலில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை பிரச்னைகள் மிகவும் பெரிதாக பேசப்பட்டது. பெரும்பாலானவர்கள் பணவீக்கத்தில் டிரம்பின் ஆதரவாளர்களே அவரின் மேல் நம்பிக்கை தெரிவிக்கவில்லை என்றாலும், அவரின் ஆதரவாளர்கள் 60 சதவிகிதம் பேர், அவர் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவார் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.
இந்த சர்வேயில், மூன்றில் ஒரு அமெரிக்கர்கள் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை சிறப்பாக கையாள்வார் என்று கூறியிருக்கின்றனர்.
டிரம்பின் ஆட்சியில் பொருளாதாரம் குறித்து அமெரிக்கர்கள் கூறியது ஒருபக்கம் இப்படியென்றால், இன்னொரு பக்கம், உலக வங்கி டிரம்பின் அதிரடி வரிகளால் உலக நாடுகளின் வளர்ச்சி பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது.
வரும் திங்கள்கிழமை அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்ப் உலக அளவிலான இறக்குமதிகளுக்கு 10 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்றும், கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் போதை மருந்துகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை தடுக்கும் வரை அந்த நாடுகளின் இறக்குமதிகளுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்றும், சீன பொருள்களின் இறக்குமதிகளுக்கு 60 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
டிரம்பின் இந்த முடிவுகளால் உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.