Virat Kohli: "அவர் மீண்டும் டெஸ்ட் விளையாட வர வேண்டும்..." - முன்னாள் வீரர் மதன் லால் அழைப்பு
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவிய நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி ஓய்வைத் திரும்பப்பெற்றுவிட்டு களத்துக்குத் திரும்ப வேண்டுமென குரல் கொடுத்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் மதன் லால்.

விராட் கோலி கடந்த மே மாதம் நீண்ட கிரிக்கெட் வகைமையான டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பலருக்கும் அதிர்ச்சியளித்த அந்த முடிவிலிருந்து பின்வாங்குவது ஒன்றும் கடினமான காரியமில்லை எனக் கூறியுள்ள மதன் லால், கோலி அவரது அனுபவங்களையும் விளையாட்டின் மீதான விருப்பத்தையும் இளம் வீரர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.
கிரிக்கெட் பீடியா தளத்தில் பேசியபோது, "கிரிக்கெட்டின் மீது விராட் கோலிக்கு இருந்த ஆர்வத்துக்கு ஈடு இல்லை. அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பதே என் விருப்பம். அவர் எளிமையாக இன்னும் 1,2 ஆண்டுகளுக்கு விளையாடலாம். அது உங்கள் அனுபவத்தை இளைஞர்களுக்குக் கடத்துவதைப் பற்றியது.

நீங்கள் இப்போதுதான் விலகினீர்கள். தாமதம் ஆகிவிடவில்லை, தயவு செய்து திரும்பி வாருங்கள்." எனப் பேசினார் அவர்.
இத்துடன், சுப்மன் கில் அவரது அமைதியை இழந்துவிடுவதாகவும் டெக்னிக்கலாக வலிமையாக இல்லை என்றும் கூறியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன்.