மாரியூா் கோயில் சித்திரை திருவிழா: கடலில் வலைவீசும் படலத்துடன் திருக்கல்யாணம்
Virat Kohli: `30 சதங்கள், வெற்றிகரமான கேப்டன்சி' - டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் சாதித்தது என்ன?
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட் கோலி. அவரது கெரியரில் 123 டெஸ்ட் போட்டிகளை விளையாடி, 9230 ரன்கள் அடித்திருக்கிறார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் 269-வது வீரராக அறிமுகமான விராட், 30 சதங்களுடனும் 31 அரை சதங்களுடனும் பல மறக்க முடியாக இன்னிங்ஸ்களும் விளையாடியிருக்கிறார்.

ரோஹித்தை தொடர்ந்து விராட்டும் ஓய்வை அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விராட் கோலியின் நீண்ட டெஸ்ட் கெரியரை ஒரு விசிட் அடிக்கலாம்...
Virat Kohli: இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன்!
2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக 22 வயதில் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார் விராட். அதே ஆண்டில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணித்தின்போது டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்தார்.
அடிலெய்டில் நடந்த போட்டியின்போது இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சில் திணறியபோது விராட் நிலைத்து நின்று, 116 ரன்கள் அடித்தார்.
விராட் கோலியின் டெஸ்ட் கெரியரில் முக்கிய இடம் அந்த மைதானத்துக்கு உண்டு. அங்கு பல சாதனைகளைப் படைத்திருக்கிறார்.

2014ம் ஆண்டு தோனி காயம் காரணமாக விளையாடமுடியாத சூழலில், முதல் முறையாக இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக உருவெடுத்த விராட், அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 115, இரண்டாவது இன்னிங்ஸில் 141 என இரண்டு சதங்கள் விளாசி அணியை முன்நகர்த்தினார்.
அந்த போட்டியில் தோல்வியை சந்தித்தாலும், விராட் களத்தில் நின்றவரை மேட்சை சமன் செய்வது குறித்த சிந்தனையே இல்லை. தொடர்ச்சியாக பேட்டர்கள் விக்கெட் ஆனாலும், வெற்றி ஒன்றே இலக்கு என்ற ஆக்ரோஷத்துடன் விளையாடினார் கேப்டன் விராட்.
டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொருத்தவரையில் பயமறியாத கேப்டனாக திகழ்ந்தார் விராட் கோலி. அவர் கேப்டன்சி செய்த 68 போட்டிகளில் 40 போட்டிகளை இந்தியா வென்றுள்ளது.
வெற்றிகள் சதவிகிதத்தின் அடிப்படையில், இந்திய அணியின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் விராட் எனக் கூறலாம்.
ஒட்டுமொத்தமாக கிரேம் ஸ்மித் (53 வெற்றிகள்), ரிக்கி பாண்டிங் (48 வெற்றிகள்) மற்றும் ஸ்டீவ் வாஹ் (41 வெற்றிகள்) ஆகியோருக்குப் பின்னால் 4வது வெற்றிகரமான கேப்டன் என்கிறது ஐசிசி புள்ளிவிவரம்.
2016 முதல் 2019 வரை விராட் கோலி கெரியலில், முக்கியமான காலகட்டம் எனலாம். ஒவ்வொரு போட்டியிலும் விராட் பேட்டிங் சூறாவளியாக அரங்கை சுழற்றியது. 43 டெஸ்ட் போட்டிகளில் 66.73 சராசரியுடன் 4,208 ரன்கள் அடித்தார். 10 அரை சதங்களும் 16 சதங்களும் அடித்தார்.
அந்த காலகட்டத்தில்தான் அவரது 7 இரட்டை சதங்களும் அரங்கேறின. ஒரு கேப்டனாக அதிக இரட்டை சதங்கள் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.
30 சதங்கள் மூலம் 4வது அதிக சதமடித்த இந்திய வீரராக திகழ்கிறார் விராட் கோலி. இந்த பட்டியலில் சந்தேகத்துக்கிடமில்லாமல் சச்சின் (51) முன்னிலையில் உள்ளார். ராகுல் டிராவிட் (36) மற்றும் சுனில் கவாஸ்கர் (34) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதமடித்த கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் விராட் கோலி. 20 சதங்களை தான் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தநிலையில் சுனில் கவாஸ்கர் 11 சதங்களுடன் உள்ளார்.
விராட் கோலியின் சில சுவாரஸ்யமான இன்னிங்ஸ்கள்:
2013-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக – ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில், 119 & 96 ரன்கள்.
2014-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக – அடிலெய்டு மைதானத்தில், 115 & 141 ரன்கள்.
2016ல் இங்கிலாந்துக்கு எதிராக – மும்பை, வாங்கடே மைதானத்தில், 235 ரன்கள்.
2018ல் இங்கிலாந்துக்கு எதிராக – எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில், 149 ரன்கள்.

2018ல் தென்னாப்ரிக்காவுக்கு எதிராக - செஞ்சுரியன் மைதானத்தில் 153 ரன்கள்.
2019ல் தென்னாப்ரிக்காவுக்கு எதிராக - புனே மைதானத்தில் 254 ரன்கள். அதுதான் அவரது 7வது இரட்டை சதம். அதுவே இறுதி இரட்டை சதமாக இருக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போலத்தான் இந்த இன்னிங்ஸ்கள். விராட் நிலைத்து விளையாடும்போது அவரது ஸ்டமினாவும், சற்றும் சிதறாத கவனமும், பேட்டை சுழட்டும் ஸ்டைலும் எதிரணியையே ஈர்த்துவிடும். ரசிகர்கள் என்ன செய்வார்கள், பாவம்.!
`என்னுடை டெஸ்ட் கரியரை எப்போதுமே ஒரு சிறு புன்னகையுடன் திரும்பிப் பார்த்துக் கொள்வேன்.’ என ஓய்வு அறிவிப்பு பதிவில் குறிப்பிட்டுள்ளார் கோலி. நாங்களும் அப்படி தான் கோலி!