டேய் தகப்பா.. என்னடா இதெல்லாம்... அஸ்வின் நகைச்சுவைப் பதிவு!
YouTube: ``8 லட்சம் முதலீடு; 250 வீடியோ..'' -யூடியூப்பில் தோல்வியைச் சந்தித்த பெண் சொல்வதென்ன?
பலருக்கும் இன்று சோசியல் மீடியா வருமானம் ஈட்டும் ஒரு தளமாக அமைந்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக பெரும்பாலானோர் யூடியூப் சேனலைத் தொடங்கி சம்பாதித்து வருகின்றனர். அந்தவகையில் நளினி உன்னாகர் என்ற பெண்ணும் யூடியூப் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சேனல் ஒன்றைத் தொடங்கி இருக்கிறார். அவரது சேனலில் சமையல் தொடர்பான வீடியோக்களைப் பதிவிட்டு வந்திருக்கிறார். கடந்த 3 வருடங்களாக சமையல் வீடியோக்களைப் பதிவிட்டு வந்த அவர் இதுவரை 250க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவிட்டிருக்கிறார்.
இதற்காக சுமார் 8 லட்சம் வரை கேமரா, மைக், கிச்சன் சாதனங்கள் உள்ளிட்ட பொருள்களை வாங்கியிருக்கிறார். ஆனால் அவருக்கான அங்கீகாரமும், வருமானமும் யூடியூபில் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் அவர் பதிவிட்டிருந்த அனைத்து வீடியோக்களையும் அவர் நீக்கி இருக்கிறார். இனிமேல் வீடியோக்களைப் பதிவிட மாட்டேன் என்று கூறி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், " நான் யூடியூப்பிற்காக 3 வருடங்களை அர்ப்பணித்திருக்கிறேன். 250க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவிட்டிருக்கிறேன். ஆனாலும் நான் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதனால் அனைத்து வீடியோக்களையும் நீக்கி விட்டேன். இனிமேல் வீடியோக்களைப் பதிவிட மாட்டேன். கேமரா, மைக், கிச்சன் சாதனங்கள் போன்றவற்றிற்காக 8 லட்சம் முதலீடு செய்திருக்கிறேன்.
இந்த உபகரணங்களை வாங்க யாருக்காவது விருப்பம் இருந்தால் என்னிடம் இருந்து வாங்கிக்கொள்ளுங்கள். ஆன்லைன் தளங்களில் சம்பாதிப்பதற்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை. எனவே அவற்றை முதன்மை வருமான ஆதாரமாக நம்பாமல் இருப்பது புத்திசாலித்தனம்" என்று எச்சரிக்கை விடுத்து பதிவிட்டிருக்கிறார். அவரின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.