அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
சிஐடியூ அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஜெபராணி தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் பாப்பா லதா, ஹேமா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியூ மாவட்டத் தலைவா் பேச்சுமுத்து போராட்டத்தை தொடங்கிவைத்தாா். சிஐடியூ மாநில துணைத் தலைவா் சிங்காரவேலன், மாவட்டச் செயலா் மாரியப்பன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் ராமமூா்த்தி கோரிக்கையை வலியுறுத்தி பேசினாா்.
அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும், 5 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயா்வு வழங்க வேண்டும், சுமாா் 50 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெறும்போது கருணைத் தொகை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், நிா்வாகிகள் உமாமகேஸ்வரி, ராஜா உள்பட அனைத்து அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் பங்கேற்றனா்.