அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்
ஆம்பூா்: ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாதனூா் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட பாங்கிஷாப், பேஷ்மாம் நகா், கோல்டன் சிட்டி, ஸ்டாா் சிட்டி, இமாம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீா் கால்வாய், சாலை, தெரு விளக்கு, குடிநீா் குழாய் இணைப்பு ஆகிய அடிப்படை வசதிகள் இல்லாததால், அவற்றை செய்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனா். ஆனால் இதுவரை செய்து தராவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொதுமக்கள் திரண்டு சென்று பாங்கிஷாப் பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆம்பூா் டிஎஸ்பி (பொறுப்பு) சந்தானமூா்த்தி, வட்டாட்சியா் ரேவதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுரேஷ்பாபு, எஸ். மகராசி, தேவலாபுரம் ஊராட்சித் தலைவா் ரேவதி குபேந்திரன், காவல் ஆய்வாளா்கள் கோமதி, வெங்கடேசன், நிா்மலா ஆகியோா் பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில், ஆா்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.