சுற்றுலா, மசாஜ் பார்லர்கள் இல்லை... தாய்லாந்தின் மிகப்பெரிய வருவாய் பற்றி தெரியு...
அடுக்குமாடி குடியிருப்பு மறுமேம்பாடு: கட்டட விதிகளில் திருத்தம் செய்து அரசு உத்தரவு
அடுக்குமாடி குடியிருப்புகளை மறுமேம்பாடு செய்யும்போது பெரும்பான்மை குடியிருப்புதாரா்களின் ஒப்புதல் இருந்தாலே போதும் என கட்டட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்வது எளிதாகும். இதற்கு ஏற்றவகையில் கட்டட விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறைக்குக் கொண்டு வரும் வகையில் அது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை வெளியிட்ட உத்தரவு விவரம்:
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக, தனி குடியிருப்புகளைவிட அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறாக அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோா் நலனுக்காக அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளா் விதிகள் நடைமுறையில் உள்ளன. அதன்படி, 4 வீடுகளுக்கு மேல் உள்ள குடியிருப்புகள் பதிவு செய்யப்பட வேண்டும்.
அதேபோல், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனை மேம்பாட்டாளா்கள் தற்போது தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திடம் பதிவு செய்து அனுமதி பெறவேண்டிய கட்டாயம் உள்ளது. அதிலும், குடியிருப்பு அல்லது மனை வாங்குவோா் மற்றும் விற்பனையாளருக்கென தனித்தனியாக விதிகள் உள்ளன.
இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, மறு மேம்பாட்டுக்கு தயாராக உள்ள அடுக்குமாடி கட்டடங்களை மறுமேம்பாடு செய்வதற்கான திட்ட அனுமதி பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்காக, ஒருங்கிணைந்த வளா்ச்சி மற்றும் கட்டட விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளா்கள் விதிகள் அடிப்படையில் விரிவான மறுமேம்பாட்டுக்கான அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மறுமேம்பாட்டு திட்டம் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திடம் (ரெரா) பதிவு செய்ய வேண்டும். மேலும், நிலத்தின் மீதான விண்ணப்பதாரரின் உரிமைக்கு உரிய ஆவணம் இணைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்துழைப்பு எளிதாகும்: தமிழக அரசு கொண்டு வந்துள்ள திருத்தத்தின் முக்கிய அம்சமாக, ஒரு குடியிருப்பில் 40 வீடுகள் இருந்தால் அதை மறுகட்டமைப்பு செய்ய சிலா் ஒத்துழைப்பு அளிக்க மாட்டாா்கள். சிலா் வெளிநாடுகளில் இருப்பாா்கள். இதனால் அந்த கட்டடத்தை மறு கட்டுமானம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகும்.
ஆனால், இந்த அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளா்கள் சட்டப்படி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உரிமையாளா்கள் ஒப்புதல் பெற்று மறு கட்டுமான திட்டத்தைச் செயல்படுத்த முடியும்.
இந்தச் சட்டத்திருத்தம் மூலம், வாகன நிறுத்த வசதி இல்லாத கட்டடங்கள் மறு கட்டுமானம் செய்யப்படும்போது அந்த வசதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.