`அண்ணாமலை இருந்தவரை எல்லாம் சரியாக இருந்தது..!' - டிடிவி தினகரன்
செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்" என்று கறாராக நேற்றுப் பேசியிருக்கிறார்.
சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரும் 'அதிமுக ஒன்றிணைய வேண்டும்' என்ற இதே கருத்தை கூறிவரும் நிலையில், செங்கோட்டையனும் இதை வழிமொழிந்து பேசியிருப்பது அதிமுக தொண்டர்களிடையே பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.
இந்நிலையில் இன்று இதைத் தொடர்ந்து, இன்று செங்கோட்டையன் அமைப்புச் செயலாளர் பொறுப்பு மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாகவும், அத்துடன் அவரது ஆதரவாளர்களான ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளும் நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து செங்கோட்டையன், "தர்மம் தழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வலியுறுத்தினேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வழியில் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவே இந்தக் கருத்தைக் கூறினேன். கட்சிப் பொறுப்புகளிலிருந்து என்னை நீக்கியதற்கு வருத்தம் இல்லை. எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக ஒருங்கிணைப்புப் பணி தொடரும்" என்றார்.

செங்கோட்டையனுக்குப் பின்னடைவு அல்ல
இந்த விவகாரம் குறித்துப் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் அதிமுக இடம்பெற்றிருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "அதிமுகவிற்காக உழைத்த மூத்த தலைவர் செங்கோட்டையனை பதவியில் இருந்து நீக்கியது, அவருக்கு பின்னடைவு அல்ல. அதை செய்தவருக்குத்தான் பின்னடைவு என்பதை காலம் உணர்த்தும்" என்று பேசியிருக்கிறார்.
NDA கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற நயினார் நாகேந்திரன் தான் காரணம்
இதைத்தொடர்ந்து பாஜக தலைமையிலான தே.ஜ கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்து பேசிய தினகரன், "பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்த வரை எல்லாம் சரியாக இருந்தது. எங்களை கூட்டணிக்கு அண்ணாமலை தான் கொண்டு வந்தார். என்னைப் போலவே அண்ணாமலை வெளிப்படையான நபர். தலைவர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது.

நயினார் நாகேந்திரன் தான் ஓ.பன்னீர்செல்வம் NDA கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு காரணம். பன்னீர்செல்வம் விஷயத்தில் நயினாரின் செயல்பாடு எனக்கு மன வருத்தத்தை அளித்தது. NDA கூட்டணியில் அதிமுக வந்தது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதால் இந்த முடிவை எடுத்தோம். கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டும் தான். புதிய கூட்டணிகள், வாய்ப்புகள் உருவாகும். வெற்றிபெறும் கூட்டணியில் நிச்சயம் நாங்கள் இருப்போம்" என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs