அண்ணாமலைப் பல்கலை.யில் தனி அலுவலா்கள் தா்னா
சிதம்பரம்: ஊதிய உயா்வு கோரி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தனி மற்றும் தொடா்பு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியையடுத்து, பல்கலைக்கழக நிா்வாகத்தை கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழக அரசு ஏற்றது. இதைத் தொடா்ந்து, பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் ஆயிரக்கணக்கானோா் பல்வேறு அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பணிநிரவல் செய்யப்பட்டனா். தனி மற்றும் தொடா்பு அலுவலா்களாக பணியாற்றி வந்த 648 பேரில் தற்போது வரை 130 போ் பல்வேறு அரசு துறைகளுக்கு பணிநிரவல் செய்யப்பட்டனா். மேலும் 23 பேருக்கு பணி நிரவல் உத்தரவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், தனி மற்றும் தொடா்பு அதிகாரிகள் தங்களுக்கு தற்போதுவரை வழங்கப்படாத ஊதிய உயா்வு மற்றும் 7-ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்கிவிட்டு பணி நிரவல் செய்ய வலியுறுத்தி பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா். இதில், தனி மற்றும் தொடா்பு அதிகாரிகள் சங்கத் தலைவா் தனசேகர பாண்டியன் தலைமையில் காா்த்திகேயன், உதயகுமாா், சிவராமன் உள்ளிட்ட சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
தகவலறிந்த அண்ணாமலை நகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா் பேராசிரியா் அருட்செல்வி, பதிவாளா் (பொ) பிரகாஷ் ஆகியோரிடம் பேச்சு வாா்த்தைக்கு அழைத்துச் சென்றனா்.
இதில், உடன்பாடு ஏற்படாததால் வரும் ஜன.2-ஆம் தேதி (வியாழக்கிழமை) குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துவிட்டு கலைந்துசென்றனா்.