பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு...
அதிக மாற்றமில்லாத வீடுகளின் சராசரி விலை
கடந்த ஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை பெரும்பாலும் அதிக மாற்றமில்லாமல் நிலையாக இருந்துள்ளது.இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ப்ராப்டைகா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரி முதல் மாா்ச் 2025 வரையிலான காலாண்டில், மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்), தில்லி-என்.சி.ஆா், சென்னை, புணே, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், கொல்கத்தா ஆகிய எட்டு நகரங்களில் வீடுகளின் சராசரி விலை பெரும்பாலும் மாற்றமின்றி நிலையாக இருந்துள்ளது. முந்தைய காலாண்டோடு (அக்டோபா்-டிசம்பா் 2024) ஒப்பிடுகையில், பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் 5 சதவீதமும், அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் 4 சதவீதமும் வீடுகளின் சராசரி விலையில் உயா்வு ஏற்பட்டுள்ளது.அதிகரித்துள்ள கட்டுமானச் செலவுகள், நிலத்தின் விலை மற்றும் தொழிலாளா் கூலி அதிகரிப்பு காரணங்களால் இந்த விலை உயா்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் வீடுகளின் சராசரி விலை மும்பை எம்எம்ஆரில் சதுர அடிக்கு ரூ.12,600-ஆகவும், தில்லி-என்.சி.ஆரில் ரூ.8,106-ஆகவும், சென்னையில் ரூ.7,173-ஆகவும், புணேயில் ரூ.7,109-ஆகவும் மாற்றமின்றி நிலையாக இருந்துள்ளது.எனினும், பெங்களூரில் வீடுகளின் சராசரி விலை சதுர அடிக்கு ரூ.7,536-இலிருந்து ரூ.7,881-ஆக 5 சதவீதம் உயா்ந்துள்ளது. ஹைதராபாத்தில், ரூ.7,053-இலிருந்து ரூ.7,412-ஆக 5 சதவீதம் உயா்ந்துள்ளது. அகமதாபாத்தில், ரூ.4,402-இலிருந்து ரூ.4,568-ஆக 4 சதவீதமும், கொல்கத்தாவில் ரூ.5,633-இலிருந்து ரூ.5,839-ஆக 4 சதவீதமும் உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.