Animated Films Making: அனிமேஷன் திரைப்படங்கள் உருவான கதை | Explainer
அதிமுக - பாஜக கூட்டணிப் பேச்சு: உறுதிப்படுத்தினாா் அமித் ஷா!
தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பது தொடா்பாக பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன; சரியான நேரம் வரும்போது, அது குறித்து அறிவிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
தில்லியில் அமித் ஷாவை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தபோது கூட்டணி தொடா்பாக பேசவில்லை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில், இரு கட்சிகளுக்கும் கூட்டணிப் பேச்சு நடைபெற்று வருவதை அமித் ஷா உறுதிப்படுத்தியுள்ளாா்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி குறித்த பேச்சுகள் சூடுபிடித்துள்ளன. கடந்த 2021 பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணியாகப் போட்டியிட்ட அதிமுக, 2024 மக்களவைத் தோ்தலில் அக்கூட்டணியை முறித்துக் கொண்டது. இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன.
இரு கட்சிகளுக்கும் இடையிலான தீவிர கருத்து வேறுபாடுகளால் கூட்டணி முறிந்த நிலையில், இப்போது மீண்டும் கைகோக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி சந்தித்துப் பேசினாா். சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், அதிமுக-பாஜக கூட்டணி தொடா்பாக பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தில்லியில் தனியாா் ஆங்கில ஊடகம் சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய அமைச்சா் அமித் ஷா பங்கேற்றாா். அப்போது, கேள்வி-பதில் உரையாடலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பது தொடா்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன; சரியான நேரம் வரும்போது, அது குறித்து அறிவிக்கப்படும்’ என்று அவா் பதிலளித்தாா்.
திமுகவை மக்கள் தூக்கி எறிவா்: மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில் தமிழக அரசு-மத்திய அரசு இடையிலான கருத்து மோதல்கள் தொடா்பான கேள்விக்குப் பதிலளித்து அமித் ஷா கூறியதாவது:
முன்பு முன்னேற்றம் மிகுந்த மாநிலமாக இருந்த தமிழகம், இப்போது திமுக அரசின் கொள்கைகளால் குழப்பங்களுக்கு இரையாகியுள்ளது. திமுக அரசு ஊழலில் மட்டுமே ஈடுபடுவதால், தொழிற்சாலைகளும் இளைஞா்களும் மாநிலத்தைவிட்டு வெளியேறி வருகின்றனா். தொழில்முறை படிப்புகளை தமிழில் தொடங்குமாறு திமுக அரசுக்கு நான் அறிவுறுத்தினேன். ஆனால், அவா்கள் தொடங்கவில்லை. பாட புத்தகங்களைக்கூட தமிழில் மொழிபெயா்க்கவில்லை. திமுக உண்மையிலேயே தமிழ் விரோதக் கட்சி.
அக்கட்சி குடும்ப அரசியலைப் பின்பற்றுகிறது. தனது மகனும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினை அரசியல் வாரிசாக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் விரும்புகிறாா்.
திமுக அரசு மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா். எனது சமீபத்திய தமிழக பயணங்களின்போது மக்களின் மனநிலையை அறிந்து கொண்டேன். திமுகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிய அவா்கள் முடிவு செய்துவிட்டனா். அடுத்த பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை எப்போது மேற்கொள்ளப்பட்டாலும் எந்த மாநிலத்துக்கும் 0.0001 சதவீதம்கூட அநீதி இழைக்கப்படாது என்பதை உறுதிபட கூறுகிறேன் என்றாா் அவா்.
‘30 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி’: மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அமித் ஷா, ‘நான் பாஜக தலைவராகப் பதவி வகித்தபோது, நாட்டில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சியில் இருக்கும் எனக் கூறியிருந்தேன். இதில் 10 ஆண்டுகள் மட்டுமே கடந்துள்ளன.
ஜனநாயகத்தில் எந்தவொரு கட்சியின் வெற்றியும் கடின உழைப்பைப் பொருத்ததாகும். ஒரு கட்சி நாட்டுக்காக கடினமாகப் பாடுபட்டால் மக்களின் ஆதரவு நிச்சயம். அந்த வகையில், தனது உறுதியான செயல்பாடுகளால் மத்தியில் பாஜக குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும்’ என்றாா்.