பாக். டெஸ்ட்: 18 வயது வீரருக்கு தெ.ஆப்பிரிக்க அணியில் வாய்ப்பு!
அந்தரங்கப் படங்களைக் காட்டி காதலிக்கு மிரட்டல்; விசாரணையில் வெளியான காதலனின் வெறிச்செயல்
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் அபினவ் (17) என்ற மாணவர் 11வது வகுப்பு படித்து வந்தார். அவனது வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் 12வது வகுப்பு படிக்கும் 17 வயது மாணவர் ஒருவர் இருக்கிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து பொறியியல் படிப்பிற்கான நுழைவுத்தேர்வுக்குத் தயாராகி வந்தனர். இருவரும் சேர்ந்தே கோச்சிங் கிளாஸ் சென்றனர்.
சம்பவத்தன்று இருவரும் சேர்ந்தே கோச்சிங் கிளாஸ் சென்ற நிலையில் அபினவ் மட்டும் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து பக்கத்து வீட்டு மாணவரிடம் விசாரித்தபோது, தனக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளார். அபினவை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். அவரது மொபைல் போன் ஆப் செய்யப்பட்டு இருந்தது. கோச்சிங் கிளாஸ் சென்று தேடியபோது சிறிது தூரத்தில் அபினவ் மொபைல் போன் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அபினவ் தந்தை சுனில் குமார் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து அபினவைத் தேடி வந்தனர். அபினவ் கடைசியாக அவரது பக்கத்து வீட்டு 17 வயது மாணவருடன் இருந்ததை அனைவரும் பார்த்துள்ளனர். இதையடுத்து போலீஸார் அந்த மாணவரைப் பிடித்து விசாரித்தனர். அதோடு கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது இருவரும் சேர்ந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதையடுத்து அந்த மாணவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இது குறித்து நகர போலீஸ் எஸ்.பி. ஆயுஷ் விக்ரம் சிங் கூறுகையில், "கொலை செய்யப்பட்ட நபர் கொலையாளியின் மொபைல் போனில் இருந்து அவருக்குத் தெரியாமல் சில டேட்டாக்களை திருடி இருக்கிறார்.
போனில் அந்த நபரின் காதலியின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்துள்ளன. அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களைக் காட்டி தனது நண்பனின் காதலியை அபினவ் மிரட்டி இருக்கிறார். அதோடு தன்னைத் தனியாக வந்து சந்திக்கும்படி அப்பெண்ணிடம் கேட்டுள்ளார். ஆனால், அப்பெண் வர மறுத்துள்ளார். இதனால் தன்னிடம் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இண்டர்நெட்டில் பதிவிடப்போவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து அப்பெண் தனது காதலனிடம் தெரிவித்துள்ளார். உடனே கோபம் அடைந்த அப்பெண்ணின் காதலன் அபினவைப் பழிவாங்க முடிவு செய்தார். இதற்காக தனது மொபைல் போனை விற்பனை செய்ய வேண்டும் என்று கூறி, அபினவை வெளியில் அழைத்துச் சென்றுள்ளார். ஒரு கடையில் போனை 8 ஆயிரம் ரூபாயிக்கு விற்பனை செய்துள்ளனர்.
இருவரும் சேர்ந்து சாப்பிட்டுள்ளனர். பின்னர் இருவரும் தனியாக நடந்து வந்தபோது 17 வயது வாலிபர் தனது பேக்கில் இருந்த சுத்தியலை எடுத்து அபினவ் தலையில் ஓங்கி அடித்துள்ளார். கீழே விழுந்த பிறகும் தொடர்ந்து அடித்து கொலை செய்துள்ளார். குற்றவாளி சொன்ன இடத்திலிருந்து அபினவ் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்குப் பிறகுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது" என்றார்.
ஆனால் இக்கொலையில் ஒருவர் மட்டும் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்றும், வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கும் என்றும், அவர்களையும் கைது செய்தபிறகுதான் உடலைத் தகனம் செய்வோம் என்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அபினவ் உறவினர் குல்தீப் இது குறித்து கூறுகையில், "போலீஸார் உண்மையை மறைக்கக்கூடாது. யாருக்கெல்லாம் இதில் தொடர்பு இருக்கிறது என்பதை தெரிவிக்கவேண்டும். எங்களது மகனுக்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.
இதையடுத்து இக்கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ஆயுஷ் விக்ரம் தெரிவித்தார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...