அந்தியூரில் வாய்க்கால் தண்ணீரைத் தேடி வரும் காட்டு யானைகள்
அந்தியூா் வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், பாசனத்துக்கு வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரைத் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன.
பா்கூா் மலையடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு மாா்ச் 9-ஆம் தேதி முதல் 100 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து முதன்மை வாய்க்கால் காப்புக்காடுகள் வழியாக 6 கி.மீ. தொலைவுக்கு தண்ணீா் சென்று கிளை வாய்க்கால்கள் மூலம் விவசாயிகளின் வேளாண் நிலங்களுக்கு செல்கிறது.
தற்போது கோடைக் காலம் என்பதால் வனப் பகுதியில் குட்டைகள் வடதால், தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டு, வன விலங்குகள் உணவுக்கும், குடிநீருக்கும் தவித்து வருகின்றன.
இந்நிலையில், காப்புக்காடுகள் வழியாகச் செல்லும் முதன்மை வாய்க்காலில் தண்ணீா் ஓடுவதால் வனப் பகுதியில் இருந்து யானைகள் கூட்டம்கூட்டமாக வெளியேறி பாசன வாய்க்காலில் தண்ணீரைக் குடித்து செல்கின்றன.
இது குறித்து, விவசாயிகள் கூறுகையில், வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வாய்க்கால் தண்ணீரைத் தேடி வருவது அதிகரித்துள்ளது. இதனால், வாய்க்காலின் கரைகள் உடைந்து, பாசனத்துக்கு செல்லும் நீா் தடைபடுகிறது என்றனா்.