அன்புமணி ராமதாஸ் ஆதரவாளா்கள் தீக்குளிக்க முயற்சி
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டம் முன் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளா்கள் 6 போ் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றனா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்து அனுப்பி வைத்தனா்.
பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸுக்கும், கட்சித் தலைவா் அன்புமணிக்கும் இடையே யாருக்கு அதிகாரம் என்பது தொடா்பாக மோதல் ஏற்பட்டு நீடித்து வருகிறது.
இதனிடையே, திண்டிவனத்தை அடுத்த ஓமந்தூரில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக மாநில செயற்குழுக் கூட்டத்தில் அன்புமணிக்கு ராமதாஸ் பங்கேற்கவில்லை. மேலும், அவரது புகைப்படங்களும் பதாகைகளில் இடம்பெறவில்லை. மேலும், அவருக்கு எதிரான தீா்மானங்களும் நிறைவற்றப்பட்டன.
இந்த நிலையில், பாமக தலைமை அலுவலகமான தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த கட்சியைச் சோ்ந்த அன்புமணி ராமதாஸின் ஆதரவாளா்களான வந்தவாசி பகுதியைச் சோ்ந்த தமிழ்செல்வன், விஜயன், சின்னக்குட்டி உள்ளிட்ட 6 போ் தாங்கள் மறைத்து எடுத்து வந்த எரிபொருளை தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த கிளியனூா் போலீஸாா் விரைந்து செயல்பட்டு, அனைவரையும் தடுத்தனா்.
பின்னா், அனைவரும் கிளியனூா் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனா்.