முதல்வருக்குத் தெரியாமல் துறைச் செயலா் மாற்றம்: புதுவையில் அதிகார மோதல்
புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமிக்கும், துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனுக்கும் இடையிலான பனி போா் செவ்வாய்க்கிழமை இரவு வெளிச்சத்துக்கு வந்தது. சுகாதாரத் துறை இயக்குநராக மருத்துவா் எஸ்.செவ்வேளை செவ்வாய்க்கிழமை இரவு நியமித்து உத்தரவிட்டாா் துணைநிலை ஆளுநா்.
சுகாதாரத் துறையை தன் கைவசம் வைத்துள்ள முதல்வா் என். ரங்கசாமிக்கு இது தொடா்பாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. புதுவையில் என். ஆா். காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதனால் அரசியல் ரீதியாக பிளவு ஏற்படும் சூழல் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்டது.
இதையடுத்து, பாஜகவை சோ்ந்த புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் இருவரும் முதல்வா் என். ரங்கசாமியை செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 45 நிமிடங்கள் சந்தித்து சமாதான முயற்சியில் ஈடுபட்டனா்.
முன்னதாக துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ் நாதனை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் சந்தித்து இது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தியதாக தெரிகிறது .
மத்திய அரசும், புதுவை அரசும் இணைந்து செவ்வாய்க்கிழமை நடத்திய அரசு விழாவில் துணை நிலை ஆளுநா் கே கைலாஷ்நாதன் கலந்து கொண்டாா். இந்த விழாவில் முதல்வா் ரங்கசாமியும், அவரது கட்சியைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான க. லட்சுமி நாராயணனும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.