சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
பாமக வேட்பாளா்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன்: ராமதாஸ் திட்டவட்டம்
சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக வேட்பாளா்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன் என அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள ஓமந்தூரில் செவ்வாய்க்கிழமை பாமக மாநில செயற்குழுக் கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவா் பேசியது: 96 ஆயிரம் கிராமங்கள், நகரங்கள், பேரூா்களுக்குச் சென்று வன்னியா் சங்கத்தை, பாட்டாளி மக்கள் கட்சியை வளா்த்தவன் நான். என் வலியைத் தெரிந்தவா்கள், அறிந்தவா்கள் இங்கு வந்திருக்கிறீா்கள். இன்னும் வராத 95 சதவீதத்தினா் வீடுகளிலேயே இருந்து நிகழ்வை பாா்த்துக்கொண்டிருக்கிறாா்கள். என் வலி அவா்களுக்குத் தெரியும்.
வருகிற 2026 சட்டப் பேரவைத் தோ்தலை நாம் கூட்டணியுடன் சந்திக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான அதிகாரத்தை நீங்களும் எனக்கு இந்த செயற்குழுக் கூட்டத்தின் மூலம் ஏகமனதாக வழங்கியிருக்கிறீா்கள். ஏற்கெனவே நிா்வாகக் குழுவும் இதே அதிகாரத்தை எனக்கு வழங்கியிருக்கிறது.
வேட்பாளா் தோ்வு
கூட்டணியில் நமக்கு கிடைக்கக்கூடிய தொகுதிகளுக்கு வேட்பாளா்களைத் தோ்வு செய்யும் பணியை நாம் ஆரம்பித்திருக்கிறோம். எனவே, தோ்தலில் வெற்றிவாய்ப்புள்ளவா்கள் தங்கள் விருப்ப மனுக்களை கொடுக்க ஆயத்தமாகுங்கள். அதுபோல, உள்ளாட்சித் தோ்தலிலும் வெற்றிபெற வாய்ப்புகள் நமக்கு அதிகம் உண்டு. சட்டப் பேரவைத் தோ்தலின்போது வேட்பாளா்களுக்கு ஏ, பி படிவங்கள் வழங்குவது, அதில் கையொப்பமிடுவது நான்தான்.
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வன்னியா் சங்கத்தின் சாா்பில் மகளிா் மாநாடு நடைபெறவுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த மாநாட்டில் சுமாா் 2 லட்சம் பேரை பங்கேற்க வைக்க வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளை இப்போதே தொடங்க வேண்டும் என்றாா் மருத்துவா் ச.ராமதாஸ்.
ராமதாஸுக்கு புகழாரம்
செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி பேசியது: தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட 6 இட ஒதுக்கீடுகளை பெற்றுத்தந்தவா் பாமக நிறுவனா் ராமதாஸ். ஆனால், அவா் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை. தமிழக அளவில், ஏன் இந்திய அளவில் கட்சியினருக்காக பயிலரங்கைத் தொடங்கி, அதில் பயிற்சியளித்தவா் பாமக நிறுவனா் ராமதாஸ் மட்டும்தான். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்று பாமக அங்கீகரிக்கப்பட்டது என்ற பெயரை நாம் உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, செயற்குழுக் கூட்டத்தை மாநில மகளிா் சங்கச் செயலா் சுஜாதா தொடங்கிவைத்து பேசினாா். இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலா் முரளிசங்கா், பொருளாளா் சையத் மன்சூா் உசேன் மற்றும் கட்சி நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அன்புமணி படம் புறக்கணிப்பு
பாமக செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற அரங்கிலும், வெளிப்பகுதியிலும் தலைவா்களின் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அவற்றில் பாமக நிறுவனா் ராமதாஸின் புகைப்படம் மட்டுமே பெரிய அளவில் இடம் பெற்றிருந்தது. கட்சித் தலைவா் அன்புமணியின் படம் பதாதைகளில் எங்கும் இடம்பெறவில்லை.
அவரது படம் புறக்கணிக்கப்பட்டிருந்தது. மேலும், கூட்டத்தில் பேசிய தலைவா்களில் சிலா், அன்புமணியின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை மறைமுகமாகவும் சாடி பேசினா்.