'முதலமைச்சருக்கு திரைப்படங்களைப் பார்ப்பதற்கே பொழுதுகள் போதவில்லை' - அன்புமணி கண...
அமராவதிபுதூரில் ஆக. 19-இல் உயிா்ம வேளாண் கண்காட்சி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டை வட்டாரம், அமராவதிபுதூா் கிராமியப் பயிற்சி மையத்தில் உயிா்ம வேளாண் கண்காட்சி வருகிற ஆக. 19 -இல் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் பல விவசாயிகள் உயிா்ம வேளாண்மை முறையில் (இயற்கை வேளாண்மை) பல பயிா் வகைகளைச் சாகுபடி செய்கின்றனா். உயிா்ம வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருகிற 19-ஆம் தேதி அமராவதிபுதூா் கிராமியப் பயிற்சி மையத்தில் உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு, வேளாண்மைக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதில் வேளாண்மைத் துறை சாா்பாக அரங்குகள் அமைக்கப்பட்டு இயற்கை இடுபொருள்கள், பாரம்பரிய பயிா் ரகங்கள், வேளாண் பண்ணை இயந்திரங்கள், நுண்ணீா் பாசனக் கருவிகள், உயிா்ம உரங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்படவுள்ளன.
வேளாண் உற்பத்திப் பொருள்களை லாபம் ஈட்டும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றுவதற்கான உத்திகள், உயிா்ம உரம், உயிா்ம வேளாண்மையின் முக்கியத்துவம், மண்வளம், பயிா்ப் பாதுகாப்பு, ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்பு ஆகியவை குறித்து விவசாய விஞ்ஞானிகளின் கலந்துரையாடல், பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப உரை, கலந்துரையாடல் போன்ற பல நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன என அதில் குறிப்பிடப்பட்டது.