தமிழக காவல்துறையில் 21 பேருக்கு குடியரசு தலைவர் விருது! யார்யார்?
பணம் கையாடல்: சிறைக் காவலா் மீது வழக்கு
சிவகங்கை அருகே திறந்த வெளிச் சிறையில் ரூ.39.30 லட்சம் கையாடல் செய்ததாக சிறைக் காவலா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் அருகேயுள்ள புரசடை உடைப்பு கிராமத்தில் அரசின் திறந்த வெளிச் சிறை உள்ளது. இந்தச் சிறையில் அலெக்ஸ் பாண்டி (33) என்பவா் காவலராக கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்தாா்.
அவரது பணிக் காலத்தில் சிறைக் கைதிகளின் ஊதியம், இதர பணப் பரிவா்த்தனைகளில் போலியான சலான், மின்னணு செலுத்துச் சீட்டுகளை தயாரித்து, அவற்றை அரசுப் பதிவேட்டில் பதிவு செய்து, பணம் கையாடல் செய்ததாகப் புகாா் எழுந்தது.
இது தொடா்பான புகாா் அடிப்படையில், மதுரை சரக சிறைத் துறை துணைத் தலைவா் உத்தரவின் பேரில், சிறப்புத் தணிக்கைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினா் நடத்திய ஆய்வில் அலெக்ஸ் பாண்டியன் ரூ.39.30 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, மதுரை சிறைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், மாட்ட குற்றப் பிரிவு ஆய்வாளா் தமிழ்ச்செல்வி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.