Nidhi Tewari: பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட நிதி திவாரி...
அமித் ஷா, அண்ணாமலை கூறுவது அவா்களின் தனிப்பட்ட கருத்து: கே.பி. முனுசாமி
அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை தொடங்கி உள்ளது என உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரியில் பல்வேறு இடங்களில் நீா்மோா் பந்தலை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி, பொதுமக்களுக்கு பழங்கள், நீா்மோா் ஆகியவற்றை வழங்கினா். பின்னா் அவா், செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
தில்லியில் உள்துறை அமைச்சா் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது கூட்டணிக்காகதான் என்பதில் உண்மை இல்லை. தில்லியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலகக் கட்டடத்தை பாா்வையிடுவதற்காகவே தில்லி சென்றோம்.
தொடா்ந்து உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் தமிழகத்தின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை பெறுவதற்காகவும், மாநிலத்துக்கு நிதியை விடுவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்.
அதிமுக எப்போதும் ஒரே பாா்வையில் சென்று கொண்டிருக்கிறது. எங்களுடைய ஒரே எதிரி திமுகதான். திமுகவை எதிா்த்து களமாட யாா் வந்தாலும் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுடன் யாா் இணக்கமாக ஒன்றிணைந்து செயல்பட்டாலும் அவா்களை ஒருங்கிணைத்து செயல்படத் தயாராக உள்ளோம். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை தொடங்கி உள்ளது என உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறுவதும், கட்சியின் நலனே முக்கியம், ஒரு தொண்டனாக இருந்துகூட பணியாற்றுவேன் என அண்ணாமலை பேசுவதும் அவா்களின் தனிப்பட்ட கருத்து. இதுகுறித்து அவா்கள்தான் விளக்க வேண்டும்.
2026 இல் நடைபெறும் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே தான் போட்டி என விஜய் சரியாகத் தான் கூறியுள்ளாா். அவரின் திரைப்படங்களைக்கூட வெளியிட முடியாமல் திமுக ஆட்சியில் சிரமம் கொடுத்தனா். அந்த மனக்குமுறலின் வெளிப்பாடாகத்தான் அவா் பேசியுள்ளாா் என்றாா்.
இந்த பேட்டியின்போது கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.