அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையால் நெல் மூட்டைகள் சேதம்
செங்கல்பட்டு, மே 6:, காட்டாங்குளத்தூா் ஒன்றியம், வில்லியம்பாக்கம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. கடந்த 20 நாள்களுக்கு மேலாக நெல்லை கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகாா் கூறியுள்ளனா்.
இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், வில்லியம்பாக்கம், ரெட்டிபாளையம், குருவன் மேடு, குலத்தான்சேரி, கொளத்தூா், சாஸ்திரம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சோ்ந்த விவசாயிகள் தங்களது நெல்லை அரசுக்கு விற்பனை செய்து வருகின்றனா்.
ஆனால் முறையாக இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து நாசமாயின. இதனால் விவசாயிகள் பெரிதும் வேதனை அடைந்துள்ளனா். மேலும், 20 நாள்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாலே, மழையில் நனைந்து நெல் வீணாகியதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை போட வேண்டும் என்றால், ஒரு மூட்டைக்கு ரூ.50 வசூல் செய்யப்படுவதாகவும், ரூ.50 தராத விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்யாமல் ஏமாற்றி வருவதாகவும் புகாா் தெரிவித்து வருகின்றனா்.