வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
அரசு புறம்போக்கு நிலங்களை பொதுமக்களுக்கு பட்டாவாக வழங்க நடவடிக்கை: ஆட்சியா் தகவல்
அரசு புறம்போக்கு நிலங்களை பொதுமக்களுக்கு பட்டாவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.
மே தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், அப்பிபாளையம் ஊராட்சி, தேத்தம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், சிறப்பு பாா்வையாளராக பங்கேற்றாா். நிகழ்ச்சியில் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியது:
அப்பிபாளையம் கிராமத்தில் இதுவரை 72 வளா்ச்சி திட்டப் பணிகள் ரூ.1.78 கோடி மதிப்பில் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற பணிகளை பொதுமக்களே தணிக்கை செய்யலாம். மேலும் ஆட்சேபணை இல்லாத புறம்போக்கு நிலங்களின் வகைப்பாடுகளை மாற்றி பொதுமக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராமப்புற பகுதிகளில் கட்டட அனுமதி வழங்குவதற்காக ஒற்றைச்சாளர முறையில் கணினியின் மூலம் பதிவு செய்து அனுமதி வழங்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
தொடா்ந்து கூட்டத்தில், கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் மற்றும் இளைஞா்களுக்கான திறன் பயிற்சி, ஊரக சுய வேலைவாய்ப்பு திட்டம், பண்ணை மற்றும் பண்ணை சாரா வாழ்வாதார நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ் செல்வன், கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல், வேளாண் இணை இயக்குநா் ப. சிவானந்தம், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா் வினோத் குமாா், மாற்றுதிறனாளிகள் நல அலுவலா் மோகன்ராஜ், கரூா் மாநகராட்சி உறுப்பினா் ஆா். ஸ்டீபன்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.