சென்னை ஐஐடியில் மிகப்பெரிய ஆராய்ச்சி - மேம்பாட்டு கண்காட்சி: பிப். 28-இல் தொடக்க...
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 51 லட்சம் மோசடி செய்தவா் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி உதகையில் 10-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.51 லட்சம் வரை மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஒரசோலை பகுதியைச் சோ்ந்தவா் மனோ (50). இவா், உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வருவதாக கூறி உதகையில் வசிக்கும் பலரிடம் ஆட்சியா் அலுவலகம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுள்ளாா். 10-க்கும் மேற்பட்ட நபா்களிடம் 2023 ஆம் ஆண்டு முதல் ரூ.51 லட்சம் வரை பெற்றதுடன் வேலை வாங்கித் தராமல் இருந்துள்ளாா்.
இதனால் இந்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவா்கள், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் நாள் கூட்டத்தில் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் மனு அளித்தனா்.
இந்த புகாா் மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷாவுக்கு உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடா்ந்து உதகை குற்றப் பிரிவு காவல் துறையினா் கோத்தகிரி ஒரசோலைப் பகுதியில் இருந்த மனோவை திங்கள்கிழமை இரவு கைது செய்து உதகை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.