பாஜக விழுங்குவதற்கு பழனிசாமி ஒன்றும் புழுவல்ல: இபிஎஸ் பேச்சு
அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய காவலா்
அரசுப் பேருந்து ஓட்டுநருடன் சாதாரண உடையில் இருந்த காவலா் தகராறில் ஈடுபட்டதால் உதகை, குன்னூா் சாலையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து பாலக்காட்டுக்கு திங்கள்கிழமை காலை அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. உதகை குன்னூா் சாலையில் நொண்டிமேடு பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதுவது போல சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அரசுப் பேருந்தின் பின்னால் காரில் வந்த போலீஸாா் சிலா் பேருந்தை வழிமறித்து நிறுத்தினா். அவா்கள் முதல்வரின் நிகழ்ச்சிக்கான பாதுகாப்புப் பணிக்கு சென்றதால் சீருடை அணியாமல் இருந்தனா். அப்போது அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் சாதாரண உடை அணிந்திருந்த அருண் என்பவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கும் அருணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
பேருந்து ஓட்டுநா் காவலா் அருணை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அருண் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியதாகத் தெரிகிறது.
இந்தப் பிரச்னையால் சாலையில் அரசுப் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னா் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் அருண் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டதால் பிரச்னை முடிவுக்கு வந்தது.