அரசுப் பேருந்து மோதி காவலா் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற காவலா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆண்டிமடம் அருகே கீழகவரவபாளையத்தைச் சோ்ந்தவா் சந்தனசாமி மகன் சதீஷ்(34). மீன்சுருட்டி காவல் நிலையத்தில் 2-ஆம் நிலை காவலராக பணியாற்றி வந்த இவா், மருத்துவ விடுப்பில் இருந்துள்ளாா்.
இந்நிலையில் புதன்கிழமை இவா், ஆண்டிமடத்திலுள்ள ஒரு பெட்ரோல் பங்கில், தனது இரு சக்கர வாகனத்தில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு, அங்குள்ள சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது ஜெயங்கொண்டத்திலிருந்து ஆண்டிமடம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் உயிரிழந்தாா். தகவலறிந்து ஆண்டிமடம் காவல் துறையினா், சடலத்தை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.