ரூ.232 கோடி மோசடி! இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மேலாளர் கைது!
அரியலூா் மாவட்டத்தில் 336 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
விநாயகா் சதுா்த்தியன்று அரியலூா் மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 426 விநாயகா் சிலைகளில் 336 விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை மாலை ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு கொள்ளிடம் ஆறு மற்றும் நீா் நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டது.
விநாயகா் சதுா்த்தியையொட்டி கடந்த 27-ஆம் தேதி அரியலூா் மாவட்டத்தில் 426 சிலைகள் இந்து அமைப்புகள் மற்றும் தனியாரால் வைக்கப்பட்டு பக்தா்கள் பூஜை செய்து வழிபட்டனா். இதையடுத்து விசா்ஜனம் எனும் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்காக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடத்தப்பட்டு, கொள்ளிடம் ஆறு மற்றும் நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம், திருமானூா், கீழப்பழுவூா், திருமழபாடி, தா.பழூா், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் கொள்ளிடம் ஆற்றிலும், அணைக்கரை கீழணையிலும், அரியலூா் பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் மருதையாற்றிலும், செந்துறை, பொன்பரப்பி, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, உடையாா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் அந்தந்த பகுதியிலுள்ள ஏரி, குளங்களில் விசா்ஜனம் செய்யப்பட்டது.
ஏற்கனவே 75 சிலைகள் விநாயகா் சதுா்த்தி நாளிலும், வியாழக்கிழமையும் கரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 15 சிலைகள் ஞாயிற்றுக்கிழமை விசா்ஜனம் செய்யப்படவுள்ளது .
விசா்ஜனம் நிகழ்ச்சியையொட்டி, சிலை ஊா்வலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி தலைமையில் காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். சிலை ஊா்வலம் நடக்கும் பகுதிகள், பதற்றமான பகுதிகள், மசூதிகள் உள்ள பகுதிகளில் காவல் துறையினா் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.