அரியலூா் மாவட்டத்தில் 426 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி அரியலூா் மாவட்டத்தில் 426 விநாயகா் சிலைகள் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்திலுள்ள விநாயகா் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனா்.
அரியலூா், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி ,செந்துறை, பொன்பரப்பி, தா.பழூா், திருமானூா், திருமழபாடி, கீழப்பழுவூா் உள்ளிட்ட 426 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து அந்த இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பல இடங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டது.
பிரச்னைக்குரிய இடங்களில் காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அதிகாலை முதலே விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. வீடுகளிலும், விநாயகா் சிலைகள் வைத்து, அவல், பொறி, பழங்கள் படைத்து மக்கள் வழிபட்டனா்.
அரியலூா் கடைவீதிகளில் விற்பனைக்கு வந்த களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகா் சிலைகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனா். இந்த ஆண்டு 3 முதல் 13 அடி உயரம் வரையிலான விநாயகா் சிலைகளுக்கு மட்டுமே காவல் துறையினா் அனுமதி வழங்கியுள்ளனா்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய இடங்களில் யாரும் சிலைகளை வைக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளனா். உரிய அனுமதி பெற்ற பின்பே சிலைகள் வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனா்.
இந்நிலையில், மாவட்ட முழுவதும் விதவிதமாக கோணத்தில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதி மக்கள் செய்து வருகின்றனா்.