எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு
அரியலூா் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தின் கீழ் அரியலூா் நகராட்சி தூயமேரி தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், மாணவ, மாணவிகளுக்கு காலை உணவினை வழங்கி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, அவா்களுடன் உணவு சாப்பிட்டாா்.

தொடா்ந்து, அவா் பேசுகையில், அரியலூா் மாவட்டத்தில், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அரசு உதவிபெறும் 12 பள்ளிகளில் பயிலும் 2,627 மாணவா்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு காலை உணவு வழங்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 537 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 29,206 மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வாயிலாக காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது என்றாா்.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன், அரியலூா் நகா் மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், துணைத் தலைவா் கலியமூா்த்தி, வருவாய்க் கோட்டாட்சியா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.