பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன் முருங்கை இலைப் பொடி அளிக்கலாம்: செளமியா சுவாமிநாதன்
பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன், ரத்த சோகையைப் போக்கக் கூடிய முருங்கை இலைப் பொடியை 5 கிராம் அளிக்கலாம் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் செளமியா சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்தாா்.
நகா்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான தொடக்க விழாவில் செவ்வாய்க்கிழமை அவா் பேசியதாவது:
காலை உணவுத் திட்டத்தால் ஏராளமான பலன்கள் சமூகத்துக்குக் கிடைக்கின்றன. ஊட்டச்சத்து, ஆரோக்கியம் உறுதி செய்யப்படுகிறது. பசியோடு இருக்கும் குழந்தைகளால், கவனம் செலுத்தி படிக்க முடியாது என்பதை இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு, மாணவா்களின் வருகைப் பதிவு மேம்பட்டுள்ளது. கல்வி கற்றல் அதிகரித்திருப்பதுடன், இடைநிற்றலும் குறைந்துள்ளது.
பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் தொற்றா நோய்களும், குழந்தைகளிடையே உடல்பருமனும் பொதுவான பிரச்னைகளாக உள்ளன.
எனவே, உணவில் மாவுச்சத்து மட்டுமன்றி, வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியன தேவை. அவை இருந்தால்தான் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். வாரத்துக்கு இரு நாள்கள் சிறுதானியங்களை அளிப்பதன் மூலம் குழந்தைகளுக்கு அவற்றின் நன்மை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த முடியும்.
முருங்கை இலைகளை தூளாக்கி உணவுடன் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். மாணவா்களுக்கு குறிப்பாக, பெண் பிள்ளைகளுக்கு 5 கிராம் முருங்கை இலைத் தூளை தினமும் அளிப்பதன் மூலம் ரத்தசோகை பிரச்னையைத் தடுக்க முடியும். முருங்கை இலைத் தூளை சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரித்து அளிக்கலாம் என்றாா் செளமியா சுவாமிநாதன்.