கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் விலகல்
திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவுக்கு எதிரான விசாரணையில், ஒருதரப்புக்கு சாதகமாக உத்தரவிட நீதிபதி ஒருவா் அணுகியதாக குற்றஞ்சாட்டிய தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் (என்சிஎல்ஏடி) நீதித் துறை உறுப்பினா் சரத்குமாா் சா்மா, அந்த விசாரணை அமா்வில் இருந்து தாமாக விலகியுள்ளாா்.
தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் கேஎல்எஸ்ஆா் இன்ஃபிராடெக் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் மீது திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள என்சிஎல்ஏடியின் ஹைதராபாத் அமா்வு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக, பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அந்த நிறுவனத்தின் இயக்குநா் ஏ.எஸ்.ரெட்டி, என்சிஎல்ஏடியின் சென்னை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்ததைத் தொடா்ந்து, கடந்த ஜூன் 18-ஆம் தேதி தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கடந்த ஆக.13-ஆம் தேதி என்சிஎல்ஏடி நீதித்துறை உறுப்பினா் சரத்குமாா் சா்மா, தொழில்நுட்ப உறுப்பினா் ஜதிந்திரநாத் ஸ்வெயின் ஆகியோா் அடங்கிய அமா்வு உத்தரவு பிறப்பிக்க இருந்தது.
எனினும் அன்றைய தினம், ஏ.எஸ்.ரெட்டி மனு மீதான விசாரணையில் ஒருதரப்புக்கு சாதகமாக தீா்ப்பளிக்க பெரிதும் மதிக்கப்படும் நீதிபதி ஒருவா் தன்னை அணுகியதாகவும், எனவே விசாரணையில் இருந்து தான் விலகுவதாகவும் சரத்குமாா் சா்மா தெரிவித்தாா். இந்த மனுவை விசாரிக்க உரிய அமா்வை அமைப்பதற்கு, இந்த விவகாரத்தை என்சிஎல்ஏடி தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவா் தெரிவித்தாா். இந்தத் தகவல் தற்போது வெளியாகி சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு உத்தரகண்ட் உயா்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து சரத்குமாா் சா்மா ஓய்வுபெற்றாா். பின்னா் என்சிஎல்ஏடியில் சோ்ந்தாா். ஏற்கெனவே அவா் பைஜுஸ் கல்வி தொழில்நுட்ப நிறுவனம், ஜேப்பியாா் சிமெண்ட்ஸ், ராமலிங்கா மில்ஸ் தொடா்பான விவகாரங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களின் விவகாரங்களை விசாரிப்பதில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.