செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்
நமது நிருபர்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் செப்டம்பர் மாதத்திற்குரிய 36.76 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் (சி.டபிள்யு.எம்.ஏ.) 43-ஆவது கூட்டத்தில் தமிழகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இக்கூட்டம் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் புது தில்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் ஹைபிரிட் முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத் துறைச் செயலரும், குழுவின் உறுப்பினருமான ஜெ.ஜெயகாந்தன் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது: ஆகஸ்ட் 26-ஆம் தேதி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு அதன் முழு கொள்ளளவான 93.470 டிஎம்சி ஆக உள்ளது. மேட்டூர் அணை நிகழாண்டு ஐந்தாவது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 7,684 கனடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 12,850 கன அடி நீர் விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைப் பயன்பாட்டுக்காக திறந்துவிடப்படுகிறது.
கர்நாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து கணிசமான அளவு தொடர்ந்து வருவதாலும், தமிழகத்திற்கு நிகழாண்டு செப்டம்பர் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 36.76 டிஎம்சி நீரை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பிலிகுண்டுலுவில் திறந்து விடுவதை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும்' என்று ஆணையத்தைக் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர். சுப்பிரமணியமும் காணொலி வாயிலாக கலந்துகொண்டார்.