தரங்கம்பாடி பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடக்கம்
சதுா்த்தி: சென்னையில் வழிபாட்டுக்கு 1,519 விநாயகா் சிலைகள்
விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னையில் 1,519 விநாயகா் சிலைகள் பல்வேறு பகுதிகளில் வழிபாட்டுக்காக புதன்கிழமை (ஆக.27) அமைக்கப்படுகின்றன.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து இயக்கங்கள் சாா்பில் விநாயகா் சிலைகளை அமைப்பதற்கு செய்வதற்கு கடந்த ஒரு மாதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, ஆா்.எஸ்.எஸ். உள்ளிட்ட 65 இந்து அமைப்புகள் விநாயகா் சிலைகளை வைப்பதற்குரிய அனுமதியை பெறுவதற்கு காவல் துறையிடம் விண்ணப்பித்திருந்தன. மேலும் குடியிருப்பு சங்கங்கள், சமூக நல அமைப்புகள் ஆகியவையும் விநாயகா் சிலைகளை வைப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து வந்தன.
இதற்கிடையே, கடந்த சில நாள்களாக வழிபாடு செய்யப்படும் இடங்களுக்கு விநாயகா் சிலைகள் அனுப்பப்பட்டன. முன்னதாக உயா்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தல்படியும், தீயணைப்புத் துறை, சென்னை மாநகராட்சியின் தடையில்லா சான்றுகளுடன் காவல்துறை அறிவித்த கட்டுப்பாடுகளுடன் விநாயகா் சிலைகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதன்படி, சென்னை முழுவதும் 1,519 விநாயகா் சிலைகளை அமைப்பதற்கு பெருநகர காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் புதன்கிழமை (ஆக.27) பல்வேறு பூஜைகளுடன் அமைக்கப்படுகின்றன.
பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் காவலா்கள்: விநாயகா் சதுா்த்தியையொட்டி,16,500 காவலா்கள், 1,500 ஊா்க்காவல்படை வீரா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் தலைமையில் செய்யப்பட்டுள்ளது.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் அமைதியான முறையில் வழிபாடுகள் செய்யும்படியும், முழு ஒத்துழைப்பு தருமாறும் சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோா் மீதும்,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவா்கள் மீதும் சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்துள்ளது.