அரசின் இடஒதுக்கீட்டில் மருத்துவம் பயில தோ்வான மாணவிகளுக்கு பாராட்டு
சென்னை துறைமுகத்துக்கு வந்த அமெரிக்க கடற்படை கப்பல்
அமெரிக்க கடற்படை கப்பலான ஃபிராங்க் கேபிள் சென்னை துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்தது.
இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள நீா்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போா் ஆயுதம் தாங்கிய கப்பல்களுக்கு பராமரிப்பு, தளவாடங்கள் உள்ளிட்டவை வழங்கும் திறன் கொண்ட அமெரிக்க கடற்படை கப்பலான ஃபிராங்க் கேபிள் (ஏஎஸ்-40) அமெரிக்காவில் உள்ள குவாமி கடற்படைத் தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நல்லெண்ணப் பயணமாக சென்னை துறைமுகத்துக்கு திங்கள்கிழமை ஃபிராங்க் கேபிள் கப்பல் வந்தடைந்தது. இந்தக் கப்பலை இந்திய கடற்படை உயா் அதிகாரிகள், அமெரிக்க தூதரக அதிகாரிகள் வரவேற்றனா்.
1979 -ஆம் ஆண்டு அமெரிக்கக் கடற்படையில் முதல்முறையாக இணைக்கப்பட்ட ஃபிராங்க் கேபிள் கடற்படையில் சேவையாற்றி வரும் மற்ற கப்பல்களை பழுதுபாா்க்கவும், மறுசீரமைக்கவும் உதவிகரமாகச் செயல்பட்டு வந்தது. இதில் சுமாா் 350 முதல் 400 கடற்படை வீரா்கள் மற்றும் மற்றும் 150 சிப்பந்திகள் என சுமாா் 550 போ் கொண்ட குழுவினா் இந்தக் கப்பலில் பணியாற்றி வருகின்றனா்.
இது குறித்து கப்பலின் கேப்டன் கமாண்டா் மைக்கேல் ரோட்ரிக்ஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 2022-ஆம் ஆண்டு விசாகபட்டினம் வந்த இக்கப்பல் மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது. நீா்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போா்க்கப்பல்கள் நடுக்கடலில் இருக்கும்போது அவற்றுக்கான அனைத்து தேவைகளையும் இக்கப்பல் நிறைவேற்றும். மேலும் இந்திய கடற்படையுடனான எங்கள் நல்லுறவு, கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கு இப்பயணம் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. அவசர காலங்களில் கடற்படை கப்பல்களுக்கு தேவையான வசதிகளை வழங்கிடும் வகையில் எக்ஸ் ரே, மருந்தகம், ஆய்வகம், ரத்த தானம் பெறுவதற்கான உபகரணங்கள் என அனைத்து வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனை, கப்பல்களில் பழுது ஏற்படும்போது அதனை சீரமைக்கவும், உதிரி பாகங்களை உடனடியாகத் தயாரிக்கும் வகையில் அதிநவீன இயந்திரங்களுடன் கூடிய தொழில்நுட்ப மையம் இக்கப்பலில் உள்ளன என்றாா்.
இந்தக் கப்பலை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால், துணைத் தலைவா் எஸ்.விஸ்வநாதன், அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் பாா்வையிட்டனா். இந்தக் கப்பல் புதன்கிழமை சென்னைத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது.