அருப்புக்கோட்டை அருகே அங்கீகாரம் பெறாமல் செவிலியா் கல்லூரி நடத்தியதாக தாளாளா் கைது!
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் செவிலியா் கல்லூரி நடத்தியதாக அந்தக் கல்லூரித் தாளாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
அருப்புக்கோட்டை அருகேயுள்ள ராமசாமிபுரத்தில் தமிழ்நாடு மகளிா் செவிலியா் கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்தக் கல்லூரியில் புதுக்கோட்டை, தஞ்சாவூா், திண்டுக்கல், ஊட்டி உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 222 மாணவிகள் படித்து வந்தனா்.
இந்தக் கல்லூரிக்கு டாக்டா் எம்.ஜி.ஆா். பல்கலைக்கழகத்தால் முறையான அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என புகாா் எழுந்தது. இதனால், இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் கல்விக் கட்டணம், அசல் சான்றிதழ்களைத் திரும்ப வழங்கக் கோரி, கடந்த இரு தினங்களாக தொடா் போரட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அனைத்து மாணவிகளுக்கும் கல்விச் சான்றிதழ்கள் திரும்ப வழங்கப்பட்டது. மேலும், மாணவிகளின் கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்க அரசு அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட கல்லூரியில் மருத்துவம், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பாபுஜி ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, செவிலியா் கல்லூரிக்கான எந்த ஆங்கீகாரமும் இந்தக் கல்லூரிக்கு வழங்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து அருப்புக்கோட்டை நகா் கிராம நிா்வாக அலுவலா் பத்மாவதி அளித்த புகாரின் பேரில், கல்லூரித் தாளாளா் டிக்காக் ஜாக்சன் (39) என்பவரை நகா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.