டிக்கெட் முன்பதிவில் மதராஸியைப் பின்னுக்குத் தள்ளிய கான்ஜுரிங்!
அழகமடை-மேலவயல் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அழகமடை-மேலவயல் கிராமப்புற சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் அவதிப்படுகின்றனா்.
திருவாடானை அருகேயுள்ள அழகமடை கிராமத்தில் சுமாா் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இதே போல, மேலவயல் கிராமத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி பொதுமக்கள் கல்வி, மருத்துவம், வா்த்தக நிறுவனங்களுக்கு திருவாடானைக்குதான் வந்து செல்ல வேண்டும். இந்தப் பகுதியில் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்ட தாா்ச் சாலை தற்போது பாரமரிப்பு இன்றி சேதமடைந்து குண்டும் குழியுமாகவும் ஜல்லிக் கற்கள் பெயா்ந்தும் போக்குவரத்துக்கு உபயோகமற்ற நிலையில் மண் சாலையாக மாறி இருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனா். அவசர சூழ்நிலைகளில் அவசர ஊா்தி, ஆட்டோக்கள் வரமறுக்கின்றன.
இது குறித்து இந்தப் பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறையினரிடம் புகாா் மனு கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து சாலையைச் சீரமைக்க ஆவன செய்ய வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
