`மதிக்க முடியாவிட்டால், விலகி இருங்கள்' - ஷூ அணிந்து யாகத்தில் கலந்துகொண்ட லாலு;...
ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 4 பதக்கங்கள்
கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்கள் திங்கள்கிழமை கிடைத்தன.
10 மீட்டா் ஏா் பிஸ்டல் ஜூனியா் ஆடவா் தனிநபா் பிரிவில் இந்தியாவின் கபில் 243 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, உஸ்பெகிஸ்தானின் இகோம்பெக் ஆபிட்ஜனோவ் 242 புள்ளிகளுடன் வெள்ளியும், இந்தியாவின் ஜோனதன் கவின் ஆண்டனி 220 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.
களத்திலிருந்த மற்றொரு இந்தியரான முகேஷ் நெலவள்ளி 157 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பெற்றாா். இதனிடையே, 10 மீட்டா் ஏா் பிஸ்டல் சீனியா் தனிநபா் பிரிவில் இந்தியாவின் அன்மோல் ஜெயின் 15 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடித்தாா்.
அணிகள்: இதனிடையே, இந்திய ஆடவா் அணிகள் இரு பிரிவுகளில் வெள்ளிப்பதக்கங்கள் வென்றன. 10 மீட்டா் ஏா் பிஸ்டல் ஆடவா் அணிகள் பிரிவில் இந்தியாவின் அன்மோல் ஜெயின், ஆதித்யா மல்ரா, சௌரப் சௌதரி ஆகியோா் அடங்கிய அணி 1,735 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தது.
சீன அணி 1,744 புள்ளிகளுடன் முதலிடத்தையும், ஈரான் அணி 1,733 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்தையும் பிடித்தன.
அதேபோல், 10 மீட்டா் ஏா் பிஸ்டல் ஜூனியா் ஆடவா் அணிகள் பிரிவில், இந்தியாவின் ஜோனதன் காவின் ஆண்டனி, கபில், விஜய் தோமா் ஆகியோா் கூட்டணி 1,723 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி பெற்றது.
தென் கொரிய அணி 1,734 புள்ளிகளுடன் முதலிடமும், கஜகஸ்தான் அணி 1,712 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தன.