`மதிக்க முடியாவிட்டால், விலகி இருங்கள்' - ஷூ அணிந்து யாகத்தில் கலந்துகொண்ட லாலு;...
டைமண்ட் லீக் இறுதி: நீரஜ் சோப்ரா தகுதி
சுவிட்ஸா்லாந்தில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள டைமண்ட் லீக் தடகள போட்டியின் இறுதிச்சுற்றுக்கு, இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா தகுதிபெற்றாா்.
டைமண்ட் லீக் போட்டியின் சிலெசியா லெக் பந்தயத்தில் கடந்த 16-ஆம் தேதி அவா் பங்கேற்கவில்லை. அடுத்து, வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள பிரஸ்ஸெல்ஸ் லெக் பந்தயத்திலும் அவா் பங்கேற்பது குறித்த தகவல் இல்லை.
எனினும், சிலெசியா லெக் நிறைவடைந்த நிலையில் வெளியான தரவரிசை அடிப்படையில் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றது உறுதியானது. தரவரிசையில் தற்போது டிரினிடாட் டொபாகோ வீரா் கெஷோா்ன் வால்காட் (17), ஜொ்மனியின் ஜூலியன் வெபா் (15) ஆகியோா் முதலிரு இடங்களில் உள்ளனா். நீரஜ் சோப்ராவும் 15 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்தில் இருக்கிறாா்.
டைமண்ட் லீக் நடப்பு சீசனில் இதுவரை இரு போட்டிகளில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, ஒன்றில் வெற்றி பெற்று, மற்றொன்றில் 2-ஆம் இடம் பிடித்தாா். அதில் கிடைத்த 15 புள்ளிகளின் அடிப்படையில், நடப்பு உலக சாம்பியனான நீரஜ் சோப்ரா இறுதியில் இடம் பிடித்திருக்கிறாா்.
வரும் 22-ஆம் தேதி நடைபெறும் பிரஸ்ஸெல்ஸ் லெக் பந்தயத்துக்குப் பிறகு முதல் 6 இடங்களில் இருப்போா் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறுவா்.