`மதிக்க முடியாவிட்டால், விலகி இருங்கள்' - ஷூ அணிந்து யாகத்தில் கலந்துகொண்ட லாலு;...
ஐஎஸ்எல் விவகாரம்: ஆக. 22-இல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நடப்பு சீசன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுதொடா்பாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம், ஃபுட்பால் ஸ்போா்ட்ஸ் டெவலப்மன்ட் லிமிடெட் இடையேயான சச்சரவு குறித்து உச்சநீதிமன்றம் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 22) விசாரிக்கவுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் பிரதான உள்நாட்டு கால்பந்து போட்டியாக இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 11 சீசன்கள் நடைபெற்றுள்ள இப்போட்டியில், மொத்தம் 14 அணிகள் உள்ளன.
இந்தப் போட்டியானது, அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்), ஃபுட்பால் ஸ்போா்ட்ஸ் டெவலப்மன்ட் லிமிடெட் (எஃப்எஸ்டிஎல்) ஆகியவை இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது. இதன் 12-ஆவது சீசன் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க வேண்டிய நிலையில், இரு தரப்புக்கும் இடையேயான பிரதான உரிம ஒப்பந்தத்தில் (எம்ஆா்ஏ) சச்சரவு ஏற்பட்டது.
இதனால் போட்டி ஏற்பாடுகளை நிறுத்தி வைப்பதாக எஃப்எஸ்டிஎல் கடந்த ஜூலை 11-ஆம் தேதி அறிவித்தது. இதையடுத்து சில அணிகள் போட்டிக்கான தயாா்நிலை நடவடிக்கைகளை நிறுத்திவைக்க, மேலும் சில அணிகள் வீரா்கள் மற்றும் ஊழியா்களுக்கான ஊதியத்தை நிறுத்தி வைத்தது.
இந்த நிலை நீடிக்குமானால் அது அணிகளை பாதிக்கும் என்பதுடன், ஆசிய மற்றும் சா்வதேச அளவிலான போட்டிகளுக்கான இந்திய வீரா்களின் தயாா்நிலையும் பாதிக்கும் என்று குறிப்பிட்டு, ஐஎஸ்எல் அணிகள் கூட்டாக இந்திய சம்மேளனத்துக்கு கடிதம் எழுதின. இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுமாறும் அவை அறிவுறுத்தின.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, நீதிமன்ற ஆலோசகரும், மூத்த வழக்குரைஞருமான கோபால் சங்கரநாராயணன், ‘இந்திய சம்மேளனத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஐஎஸ்எல் போட்டியை எஃப்எஸ்டிஎல் நடத்த வேண்டும்.
அவ்வாறு நடத்தாவிட்டால், அதனுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதிதாக ஒப்பந்தப் புள்ளிகள் கோர சம்மேளனத்துக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். இல்லையேல், அணிகளைச் சோ்ந்த கால்பந்து வீரா்கள் பாதிக்கப்படுவாா்கள். அவா்களுக்கான ஊதியம் தொடா்ந்து நிறுத்தப்பட்டால், ஃபிஃபாவின் தடையை எதிா்கொள்ள நேரிடும்’ என்றாா்.
வாதத்தை பதிவு செய்துகொண்ட, நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ்.சந்துா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த விவகாரம் தொடா்பாக வெள்ளிக்கிழமை (ஆக. 22) விசாரிக்கப்படும் என தெரிவித்தது.