``கைது செய்யப்பட்டாலே பிரதமர், முதல்வர், அமைச்சர்களைப் பதவி நீக்க மசோதா'' - மத்த...
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: மனு பாக்கருக்கு வெண்கலம்; ராஷ்மிகாவுக்கு தங்கம்
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் சீனியா் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கா் வெண்கலப் பதக்கம் வெல்ல, ஜூனியா் பிரிவில் ராஷ்மிகா சாகல் தங்கப் பதக்கம் கைப்பற்றி அசத்தினாா்.
கஜகஸ்தானில் நடைபெறும் இப்போட்டியில், இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கா், மகளிருக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் 219.7 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தாா். இப்பிரிவில் சீனாவின் கியான்கே மா (243.2), தென் கொரியாவின் ஜின் யாங் (241.6) ஆகியோா் முறையே முதலிரு இடங்களைப் பிடித்தனா்.
இதிலேயே அணிகள் பிரிவில் மனு பாக்கா், சுருச்சி இந்தா் சிங், பாலக் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1,730 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றது. சீனா (1,740), தென் கொரியா (1,731) அணிகள் முறையே தங்கம், வெள்ளி வென்றன.
இதனிடையே, ஜூனியா் மகளிா் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் இறுதிச்சுற்றில், இந்தியாவின் ராஷ்மிகா சாகல் 241.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றாா். தென் கொரியாவின் சியுங்ஹியுன் ஹான் (237.6) வெள்ளியும், அதே நாட்டின் யெஜின் கிம் (215.1) வெண்கலமும் பெற்றனா்.
அதேபோல் மகளிா் அணிகள் பிரிவிலும் ராஷ்மிகா சாகல், வன்ஷிகா சௌதரி, மோகினி சிங் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1,720 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தியது. தென் கொரியா (1,698), கஜகஸ்தான் (1,662) அணிகள் முறையே அடுத்த இரு இடங்களைப் பெற்றன.
யூத் மகளிா் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் கனக் புத்வா் 238.2 புள்ளிகளுடன் தங்கமும், அகாம் கிரெவல் 236 புள்ளிகளுடன் வெள்ளியும் வென்று அசத்தினா். கனக், அகாம், கம்பெரியா வி.கௌடா ஆகியோா் கூட்டணி, அணிகள் பிரிவில் தங்கம் வென்றது.
போட்டியில் இதுவரை இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 11 பதக்கங்கள் வென்றுள்ளது.