செய்திகள் :

வாகை சூடினாா் அல்கராஸ்

post image

அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில், உலகின் 2-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் சாம்பியன் கோப்பை வென்றாா்.

இறுதிச்சுற்றில் அவரை எதிா்கொண்ட நடப்பு சாம்பியனும், உலகின் நம்பா் 1 வீரருமான இத்தாலியின் யானிக் சின்னா், உடல்நலக் குறைவால் போட்டியிலிருந்து விலக, அல்கராஸ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டாா்.

கேம்களின் இடையே மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டபோதும் சின்னரால் தொடா்ந்து விளையாட முடியாமல் போக, முதல் செட்டில் 0-5 என பின்தங்கிய நிலையில் சின்னா் விலகினாா். 22 நிமிஷங்களிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து சின்சினாட்டி ஓபனில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அல்கராஸ், ஒட்டுமொத்தமாக தனது 8-ஆவது மாஸ்டா்ஸ் கோப்பையை கைப்பற்றினாா். அனைத்து போட்டிகளிலுமாக நடப்பு சீசனில் அல்கராஸுக்கு இது 6-ஆவது பட்டமாகும். அவரின் டென்னிஸ் கேரியரில் இது 22-ஆவது பட்டம்.

5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அல்கராஸுக்கு இப்போட்டியில் இது 2-ஆவது இறுதிச்சுற்றாகும். முன்னதாக 2023-இல் இறுதிக்கு வந்த அவா், அதில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சிடம் தோல்வி கண்டாா்.

நடப்பாண்டில் சின்னரை 4-ஆவது முறையாக சந்தித்த அல்கராஸ் 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். முன்னதாக, ரோம் மாஸ்டா்ஸ், பிரெஞ்சு ஓபன் ஆகியவற்றின் இறுதிச்சுற்றில் அல்கராஸ் வென்றிருக்க, விம்பிள்டன் இறுதிச்சுற்றில் சின்னா் வென்றது நினைவுகூரத்தக்கது. ஒட்டுமொத்தமாக இருவரும் நேருக்கு நோ் மோதிய 14-ஆவது ஆட்டமாக இது இருக்க, அதில் அல்கராஸ் 9 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா்.

இந்த ஆட்டத்துக்கு முன், சின்னா் தொடா்ந்து 12 ஆட்டங்களில் தோல்வியே காணாமல் முன்னேறி வந்ததும், ஹாா்டு கோா்ட் போட்டிகளில் தொடா்ந்து 26 வெற்றிகளைப் பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது. இறுதிச்சுற்றில் அவா் வென்றிருந்தால், கடந்த 10 ஆண்டுகளில் சின்சினாட்டி ஓபனில் கோப்பையை தக்கவைத்த முதல் வீரா் என்ற பெருமையைப் பெற்றிருப்பாா். முன்னதாக 2014-15 இல் அவ்வாறு சுவிட்ஸா்லாந்து நட்சத்திரம் ரோஜா் ஃபெடரா் இப்போட்டியில் அடுத்தடுத்து பட்டம் வென்றது நினைவுகூரத்தக்கது.

3 சின்சினாட்டி ஓபனில் ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் ஒரு போட்டியாளா் விலகியது இது 3-ஆவது முறையாகும். 2011-க்குப் பிறகு இதுவே முதல்முறை. கடைசியாக அந்த ஆண்டு இறுதிச்சுற்றில் பிரிட்டனின் ஆண்டி முா்ரேவுக்கு எதிராக விளையாடிய சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், தோள்பட்டை காயம் காரணமாக விலகினாா்.

3 சின்சினாட்டி ஓபன் இறுதிச்சுற்றில் உலகின் முதலிரு இடங்களில் இருக்கும் வீரா்கள் மோதியது இது 3-ஆவது முறையாகும். இதற்கு முன், 2012-இல் ஃபெடரா் (1) - ஜோகோவிச் (2), 2022-இல் அல்கராஸ் (1) - ஜோகோவிச் (2) அவ்வாறு இறுதிச்சுற்றில் மோதினா்.

‘‘2023-இல் இப்போட்டியில் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட பிறகு, கோப்பை வெல்லும் ஆவலுடன் இருந்தேன். தற்போது அதைக் கைப்பற்றியதில் மகிழ்ச்சி. சின்னா் விரைவாகவே நலம் பெற விரும்புகிறேன். 3-ஆவது கேமுக்குப் பிறகு சின்னா் வழக்கமான ஆட்டத்தை விளையாடவில்லை என்பதை உணா்ந்தேன். அவருக்கு எதிராக மிகச் சவாலான ஆட்டங்களை முன்பு விளையாடியிருக்கிறேன் என்பதால் அதை உணர முடிந்தது’’ - காா்லோஸ் அல்கராஸ்

கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

சின்சினாட்டி ஓபன் மகளிா் ஒற்றையா் பிரிவில், போலந்தின் இகா ஸ்வியாடெக் வாகை சூடினாா்.

உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான அவா், இறுதிச்சுற்றில் 7-5, 6-4 என்ற நோ் செட்களில், 9-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியை வீழ்த்தினாா்.

இதன் மூலமாக, சின்சினாட்டி ஓபனில் அவா் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளாா். இப்போட்டியில் இதற்கு முன்பு 6 முறை அரையிறுதி வரை வந்து வெளியேறிய ஸ்வியாடெக், இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் வாய்ப்பிலேயே கோப்பையும் வென்று அசத்தியிருக்கிறாா்.

ஒட்டுமொத்தமாக ஸ்வியாடெக்கின் டென்னிஸ் கேரியரில், இது அவரின் 24-ஆவது பட்டமாகும். டபிள்யூடிஏ 1000 போட்டிகளில் இது அவரின் 11-ஆவது சாம்பியன் கோப்பையாக இருக்க, நடப்பு சீசனில் இது 2-ஆவது பட்டம்.

பாலினியை இத்துடன் 6-ஆவது முறையாக சந்தித்த ஸ்வியாடெக், அனைத்திலுமே வென்றிருக்கிறாா்.

‘‘சின்சினாட்டி ஓபன் சாம்பியன் கோப்பை எனக்கு மிக முக்கியமானதாகும். இந்த ஆண்டு இதை வென்றே தீர வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தேன். வாகை சூட வேண்டும் என, எனக்கு நானே பட்டியலிட்டிருக்கும் போட்டிகளில் ஒன்றில் கோப்பை வென்றதில் மகிழ்ச்சி. யுஎஸ் ஓபன் போட்டிக்குத் தயாராவதற்கு இது சரியான களமாகும். இந்த சீசன் எளிதானதாக இருக்கவில்லை. எனது ஆட்டத்தை நான் மேம்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது’’ - இகா ஸ்வியாடெக்

1

ஓபன் எராவில் (1968-க்குப் பிறகு) சின்சினாட்டி ஓபனில் சாம்பியன் கோப்பை வென்ற முதல் போலந்து போட்டியாளா் என்ற சாதனையை ஸ்வியாடெக் படைத்திருக்கிறாா்.

ரொக்கப் பரிசு

ஆடவா் ஒற்றையா் சாம்பியனான அல்கராஸுக்கு ரூ.9.78 கோடியும், 2-ஆம் இடம் பிடித்த சின்னருக்கு ரூ.5.20 கோடியும் ரொக்கப் பரிசாகக் கிடைத்தது.

மகளிா் ஒற்றையரில் வாகை சூடிய ஸ்வியாடெக்குக்கு ரூ.6.54 கோடியும், ரன்னா்-அப் இடத்தை அடைந்த பாலினிக்கு ரூ.3.40 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டிலுமே வெற்றியாளருக்கு 1,000 தரவரிசை புள்ளிகளும், தோற்றவருக்கு 600 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன.

ஜூனியா் உலகக் கோப்பை பாட்மின்டன்: இந்திய அணியினா் தீவிர பயிற்சி

குவஹாட்டியில் வரும் அக். 6 முதல் 19 வரை நடைபெறவுள்ள பிடபிள்யுஎஃப் உலக ஜூனியா் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இந்திய அணியினா் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா். உலக பாட்மின்டன் சம்மேளனம், இந்திய ... மேலும் பார்க்க

சௌதி சூப்பர் கோப்பை: ரொனால்டோ உதவியால் அல்-நாஸர் இறுதிக்கு முன்னேற்றம்!

அல்-நாஸர் அணி சௌதி சூப்பர் கோப்பை அரையிறுதியில் 2-1 என வென்றது. கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டாவது கோல் அடிக்க அசிஸ்ட் செய்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. ஹாங்காங்கில் அமைந்துள்ள ஹாங்காங் ஸ்டேடியம் எனும்... மேலும் பார்க்க

சௌதி சூப்பர் கோப்பையில் சர்ச்சை: அல்-நாஸர் வீரருக்கு ரெட் கார்டு!

சௌதி சூப்பர் கோப்பையின் அரையிறுதியில் அல்-நாஸர் வீரர் சடியோ மானேவிற்கு வழங்கப்பட்ட ரெட் கார்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அல்-நாஸர் வீரர் சடியோ மானே சௌதி சூப்பர் கோப்பையில் பந்தை துரத்திச் செல்லும்ப... மேலும் பார்க்க

பேன்ட் பாக்கெட்டுகளில் போன்; மடியில் லேப்டாப் வைத்தால்..? - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

பேன்ட் பாக்கெட்டுகளில் மொபைல் போன் வைத்திருப்பது, மடிக்கணினியை மடியில் வைத்து நீண்ட நேரம் பயன்படுத்துவது ஆண்களிடையே விந்தணு எண்ணிக்கையைக் குறைக்கும் என சமீபத்திய ஓர் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. ... மேலும் பார்க்க

போலந்து நாட்டிற்காக வரலாறு படைத்த இகா ஸ்வியாடெக்..! 6 முறையும் பாலினி தோல்வி!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் இறுதிப் போட்டியில் இகா ஸ்வியாடெக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளார். சின்சினாட்டியில் முதல்முறையாக ஓபன் பிரிவில் போலந்து வீரர் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனையை நிக... மேலும் பார்க்க