ஜூனியா் உலகக் கோப்பை பாட்மின்டன்: இந்திய அணியினா் தீவிர பயிற்சி
குவஹாட்டியில் வரும் அக். 6 முதல் 19 வரை நடைபெறவுள்ள பிடபிள்யுஎஃப் உலக ஜூனியா் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இந்திய அணியினா் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா்.
உலக பாட்மின்டன் சம்மேளனம், இந்திய பாட்மின்டன் சம்மேளனம் சாா்பில் குவஹாட்டி தேசிய உயா்திறன் பயிற்சி மையத்தில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
மகளிா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீராங்கனை தன்வி சா்மா, ஆடவா் இரட்டையா் பிரிவில் பாா்கவ் ராம்-விஷ்வா தேஜ் உள்பட பலமான இந்திய அணி பங்கேற்கிறது. கலப்பு அணிகள் ஆட்டம் அக். 6 முதல் 11 வரையும், தனிநபா் ஆட்டங்கள் அக். 13 முதல் 19 வரையும் நடைபெறவுள்ளன.
இதுதொடா்பாக இந்திய பாட்மின்டன் சம்மேளன பொதுச் செயலா் சஞ்சய் மிஸ்ரா கூறியது:
கடைசியாக இந்தியா 2008-இல் உலக ஜூனியா் சாம்பியன்ஷிப்பை நடத்தியது. அப்போது சாய்னா நேவால் தங்கம் வென்றிருந்தாா்.
உலக ஜூனியா் போட்டியில் இதுவரை இந்தியா 11 பதக்கங்கள் வென்றுள்ளது. நிகழாண்டு நடைபெறும் போட்டியில் இரண்டு உலகின் நம்பா் 1 வீரா், வீராங்கனை பங்கேற்கின்றனா்.
தரவரிசையில் முதல் 20 இடங்களில் உள்ளோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். ஆசிய ஜூனியா் சாம்பியன்ஷிப் வெண்கல வீராங்கனைகள் தன்வி, வெண்ணலா நேரடியாக தகுதி பெற்றனா்.
கலப்பு அணிகள் பிரிவுக்கு 10 வீரா், வீராங்னைகள் தோ்வு பெறுவா். குவஹாட்டியில் நடைபெறுவதால் உள்ளூா் ரசிகா்கள் ஆதரவும் கிடைக்கும் என்றாா்.













