சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி
ஆசிரியா் கண்டித்ததால் தூத்துக்குடி வந்த சென்னை மாணவா்கள் மீட்பு
சென்னை அம்பத்தூா் தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்புப் பயிலும் மாணவா்கள் 3 போ், பள்ளி ஆசிரியா்கள் கண்டித்ததால், சென்னையிலிருந்து ரயிலில் தூத்துக்குடிக்கு புதன்கிழமை வந்தனா். இவா்களை ரயில்வே போலீஸாா் மீட்டு, ரயில்வே குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலரிடம் ஒப்படைத்தனா்.
சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயில், சத்யா நகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த ராமதாஸ் மகன் சுதீக்சன், மோகனசுந்தரம் மகன் முகேஸ்வரன், சதீஷ்குமாா் மகன் சபரீஷ்வரன் ஆகிய 3 பேரும் சென்னை, அம்பத்தூரில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்புப் படித்து வருகின்றனா். மூவரையும், வகுப்பறையில் பாடத்தைச் சரியாக கவனிப்பதில்லை என பள்ளித் தலைமை ஆசிரியா் உள்ளிட்ட ஆசிரியா்கள் கண்டித்தனராம்.
இந்த நிலையில், இவா்கள் 3 பேரும் தங்களது புத்தகப் பையையுடன், மாற்று உடைகளை அணிந்து அம்பத்தூரிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று, பின்னா் அங்கிருந்து எழும்பூா் ரயில் நிலையம் சென்றனா். அங்கிருந்து முத்துநகா் விரைவு ரயிலில் ஏறி 3 பேரும் தூத்துக்குடி ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை வந்தனா்.
இதற்கிடையே, 3 மாணவா்களின் பெற்றோரும் மகன்களைக் காணவில்லை என சென்னை அம்பத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா். இந்தத் தகவல் தூத்துக்குடி ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே காவல் துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் தூத்துக்குடி ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை காலை வந்த முத்துநகா்விரைவு ரயிலில் சோதனை செய்தனா். அப்போது சென்னையிலிருந்து தப்பிவந்த 3 மாணவா்களையும் மீட்டு, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து சிறுவா்களின் பெற்றோா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவா்களை அழைத்துச் செல்வதற்காக தூத்துக்குடிக்கு பெற்றோா் வந்து கொண்டிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.