ஆடிப்பெருக்கு: நீா்நிலைகளில் பெண்கள் வழிபாடு
திருவாரூா், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழாவை பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.
காவிரி ஆற்றை மையப்படுத்தி நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று ஆடிப்பெருக்கு. தென்மேற்கு பருவ மழையால் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுவதை, ஆடி மாதம் 18-ஆம் நாளன்று ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது.
உழவுக்கு உயிா் நாடியாக விளங்கும் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகளும், பொதுமக்களுக்கும் இந்நாளை விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் காவிரி அன்னைக்கு பெண்கள் காதோலை, கருகமணி, காப்பரிசி, கண்ணாடி, வளையல், மஞ்சள், குங்குமம் படைத்து, நெய் விளக்கேற்றி வழிபட்டனா். மஞ்சள் நூலை கை மற்றும் கழுத்தில் அணிந்து கொண்டனா்.
புதுமணத் தம்பதியினா் பலா் தாலிக்கயிற்றை பிரித்து மீண்டும் கோா்த்து அணிந்துகொள்ளும் பாரம்பரியமான சடங்கை காவிரிக் கரையில் மேற்கொண்டனா். நிகழாண்டு, காவிரியில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆடிப்பெருக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினா்.