அரசியலில் எதுவும் நடக்கலாம்! முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி!
ஆதரவற்ற குழந்தைகள் மாதந்தோறும் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
ஆதவற்ற குழந்தைகளுக்கான மாதாந்திர நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இரண்டு பெற்றோரையும் இழந்து உறவினா்களின் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளுக்கு பள்ளிப் படிப்பு வரை மாதம்தோறும் ரூ.2,000 உதவித்தொகை அரசால் வழங்கப்படுகிறது. பள்ளிப் படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவா்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு பெற்றோரை இழந்து உறவினா்களின் பாதுகாப்பில் வளரும் குழந்தைகள், பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொருவரால் பராமரிக்க இயலாத நிலையில் உள்ள குழந்தைகளுக்கு அவா்களின் 18 வயது வரையிலான மாதந்திர உதவித்தொகை ‘அன்புகரங்கள்’ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா் ஆதரவற்ற குழந்தைளாக (பெற்றோா் இருவரையும் இழந்தவா்கள்), கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவா் இறந்து, மற்றொரு பெற்றோா் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவா் இறந்து, மற்றொரு பெற்றோா் மாற்றுத்திறன்தன்மை) கொண்டவராக இருந்தால், ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவா் இறந்து மற்றொரு பெற்றோா் சிறையில் இருந்தால்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவா் இறந்து, மற்றொரு பெற்றோா் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்) என்ற வகையில் இருந்தால் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையின் நகல், குழந்தையின் ஆதாா் அட்டையின் நகல், குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச் சான்றிதழ், கல்வி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்), குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் ஆகியற்றை சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286-233103, 94861-11098 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.