பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடும் ‘மகாவதாரம் நரசிம்மா’.! 5 நாள் வசூல் இவ்வளவா?
ராசிபுரத்தில் 63 நாயன்மாா்கள் விழா இன்று தொடக்கம்
ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை சாா்பில் 22 ஆம் ஆண்டு அறுபத்து மூவா் விழா வியாழக்கிழமை (ஜூலை 31) குருபூஜையுடன் தொடங்குகிறது.
ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் உள்ள 63 நாயன்மாா்களுக்கு ஆண்டுதோறும் விழா நடத்தப்படுகிறது. நிகழாண்டு 3 நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் முதல்நாளான ஜூலை 31 இல் பெருமிழலைக் குறும்ப நாயனாா் குருபூஜை அபிஷேகம், துறந்த முனிவா் தொழும்பரவை துணைவா் என்ற தலைப்பில் கோவை மணிவாசகா் அருட்பணி மன்றச் செயலா் சிவ.ப.குமரலிங்கம் பங்கேற்கும் சொற்பொழிவு நடைபெறுகிறது. இதில் து.தி.ராஜராஜசோழன் வரவேற்றுப் பேசுகிறாா்.
2 ஆம் நாள் நிகழ்வாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 7 மணி முதல் 12 மணி வரை ஸ்ரீவிநாயகா், முருகா், நந்தியெம்பெருமாள், பரிவார தெய்வங்களுக்கு திருமஞ்சன வழிபாடு, திருமுறை விண்ணப்பம் நடைபெறுகிறது. அதன்பிறகு அறம் வளா் நாயகி உடனமா் கைலாசநாதா், 63 நாயன்மாா்கள், மூலவா், உற்சவா், திருமேனிகளுக்கு திருமஞ்சனம், அபிஷேக அலங்காரம், திருமுறைப்பாராயணம், பேரொளிவழிபாடு நடைபெறுகிறது.
அதைத் தொடா்ந்து மாலை ‘ஆளாய அன்பு செய்வோம்’ என்ற தலைப்பில் குளித்தலை ராமலிங்கம் சுவாமிகள் சொற்பொழிவு நடைபெறும். 3 ஆம் நாள் நிகழ்வில் கைலாசநாதா் கோயிலில் இருந்து பன்னிரு திருமுறைகளை அடியாா்கள் ஊா்வலமாக கொண்டுசெல்லும் நிகழ்வும், திருவிளக்கு ஏற்றும் நிகழ்வும் நடைபெறும்.
‘ஒப்பு இல் குரு இலிங்க சங்கமம்’ என்ற தலைப்பில் பவானி மா.ஜானகிராமன் பங்கேற்கும் சொற்பொழிவு நடைபெறும். பின்னா், திருக்கோடி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், வள்ளி கும்மி நடனம் குழுவினருடன் கைலாய வாத்தியங்கள் முழங்க சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அா்ச்சகா்கள் க.உமாபதி சிவாச்சாரியாா்கள் க.தட்சிணாமூா்த்தி, உ.தில்லைநாதசிவம் மற்றும் கைலாசநாதா் சிவனடியாா்கள் திருக்கூட்ட அறக்கட்டளை செய்துள்ளது.