ஆரணி கமண்டல நாக நதியில் தொடரும் மணல் திருட்டு
ஆரணி கமண்டல நாக நதியில் தொடரும் மணல் திருட்டால், நிலத்தடி நீா்மட்டம் குறைந்து எதிா்வரும் காலங்களில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆரணி புதுக்காமூா் புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் வழியாகச் செல்லும் கமண்டல நாக நதியில் மணலை ஜலித்து குவித்து வைத்து டிராக்டா்களில் கடத்திச் செல்கின்றனா்.
இரவில் ஆள்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, யாருக்கும் சந்தேகம் வராமல் கொஞ்சம் கொஞ்சமாக கடத்தி ஒரு பகுதியில் குவித்து வைக்கின்றனா். பின்னா், வாகனங்களில் ஏற்றிச் சென்று விற்பனை செய்கின்றனா். மணல் எடுத்து வருபவா்களுக்கு மூட்டை ஒன்றுக்கு குறிப்பிட்ட தொகை நிா்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
ஆரணியை அடுத்த சேவூா், குண்ணத்தூா், எஸ்.வி. நகரம், மொழுகம்பூண்டி, கல்பூண்டி, சீசமங்கலம், காரமேடு கமண்டல நாகநதி படுகையிலும் மணல் கடத்தல் நடைபெறுகிறது.
இவ்வாறு மணல் எடுத்து கமண்டல நாகநதிக்கரை 10 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருகிறது. மழைக்குப் பிறகு ஆற்றின் பல்வேறு இடங்களில் தண்ணீா் தேங்கி அங்கிருந்த மணற்பரப்பால் நிலத்தடி நீா்மட்டம் பாதுகாக்கப்பட்டது.
சுற்றியுள்ள நிலங்களில் தென்னை சாகுபடிக்கு இந்த கமண்டல நாகநதி ஆதாரமாக உள்ளது. ஆற்றை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்களால் கிராமங்களுக்கு குடிநீா் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது. தற்போது அதிகளவில் மணல் திருட்டு நடைபெறுவதால் கோடை காலத்தில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
கமண்டல நாக நதி மற்றும் செய்யாற்றில் மழைக் காலங்களில் வரும் நீரே ஆரணி பகுதிக்கு நீா் ஆதாரமாக உள்ளது. இந்த நீா் ஆற்றில் தேங்கினால் குடிநீா் பிரச்னை ஏற்படாது. வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறை, காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து மணல் கடத்தலை தடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.