ஒரு சிறுவன் கலைஞனாக உருவானத் தருணம்! - மிருதங்கம் அரங்கேற்ற கதை
ஆர்யா - தினேஷின் மாஸ் ஆக்ஷன்; புதிய டீமுடன் பா.ரஞ்சித்... பரபர படப்பிடிப்பு - 'வேட்டுவம்' அப்டேட்!
விக்ரமின் 'தங்கலான்' படத்திற்கு பின், 'வேட்டுவம்' படத்தை இயக்கி வருகிறார் ரஞ்சித். தமிழகத்தின் பல இடங்களில் அதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.

75 வது கான் திரைப்பட விழாவின் போது 'வேட்டுவம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பா.ரஞ்சித் வெளியிட்டிருந்தார். புலி ஒன்றின் ஓவியமும் அதில் இடம்பெற்றிருந்தது. மற்றபடி படம் குறித்த விஷயங்கள் அதில் இடம் பெறவில்லை.
அவர் 'வேட்டுவம்' படத்தை தொடங்குவார் என எதிர்பார்த்த போது தான் விக்ரமை வைத்து 'தங்கலா'னை இயக்கினார். அந்தப் படம், 19ம் நூற்றாண்டின் சமூக மோதல், சாதியக் கட்டமைப்பு, ராமானுஜர் செய்த பணிகள், நடுகல் வழிபாடு, ரயத்துவாரி வரி என பல விஷயங்களை பேசியது. அதைப் போல 'வேட்டுவ'மும் பல விஷயங்களை பேசப் போகிறது என்கிறார்கள்.

'வேட்டுவம்' ஆர்யா, 'அட்டகத்தி' தினேஷ், கலையரசன், ஷபீர், ஜான் விஜய், மைம் கோபி, லிங்கேஷ், சாய் தீனா என பலரும் நடிக்கின்றனர். ஹீரோயினாக 'பொன்னியின் செல்வ'னில் வானதியாக நடித்த சோபிதா துலிபாலா நடித்து வருகிறார். லப்பர் பந்து' படத்தில் ஹீரோவின் மாமனாராக நடித்த தினேஷ், 'வேட்டுவ'மில் வித்தியாசமான ரோலில் நடிக்கிறார். கையில் டாட்டூ, காலேஜ் பையன் லுக் என ஆளே வித்தியசமாக மாறியிருக்கிறார். ஆர்யாவை இதுவரை பார்த்திராத கோணத்தில் பார்க்கலாம் என்கிறார்கள். படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறையவே இருக்கிறது. முதற்கட்ட படப்பிடிப்பை காரைக்குடியில் நடத்திய ரஞ்சித், இப்போது கடலூர், காரைக்கால் பகுதிகளில் எடுத்து வருகிறார். இதுவரை 75 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது என்கிறார்கள்.

அதைப் போல தன் வழக்கமான டீமையும் மாற்றியிருக்கிறார் ரஞ்சித். 'பாட்டல் ராதா' படத்தின் ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்து வருகிறார். 'தங்கலா'னுக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்யாவின் திரைப்பயணத்தில் எப்படி 'சார்பட்டா பரம்பரை' முக்கியமான படமாக அமைந்ததோ, அதைப் போல 'வேட்டுவம்' படமும் பேசப்படும் என்கிறார்கள்.
ஆர்யாவிற்கு அடுத்து திரைக்கு வரும் படமாக 'மிஸ்டர் எக்ஸ்' உள்ளது. 'எஃப்.ஐ.ஆர்' மனு ஆனந்த் இயக்கியிருக்கும் இப்படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர். உளவாளி நிறுவனம் ஒன்றில் நடக்கும் கதை இது. இந்தியாவில் நடந்த சில அதிரடியான உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படமிது என்கிறார்கள்.